2015-07-31 16:20:00

வளர்ச்சித் திட்டங்கள் வழியாக அமைதி கட்டியெழுப்பப்பட வேண்டும்


ஜூலை,31,2015. ஆயுதங்கள் வழியாக அல்ல, வளர்ச்சித் திட்டங்களால் ஜப்பான் நாடு அமைதியைக் கட்டியெழுப்புவதைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் ஜப்பான் காரித்தாஸ் தலைவர்.

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் உலகின் முதல் அணுகுண்டுகள் வீசப்பட்ட நிகழ்வை, பத்து நாள் செப நிகழ்வாக ஜப்பான் கிறிஸ்தவர்கள் நினைவுகூரவிருப்பதை ஆசிய செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்ட ஜப்பான் காரித்தாஸ் தலைவரான Niigata ஆயர் Isao Kikuchi அவர்கள் இவ்வாறு கூறினார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் வேண்டுகோளின் பேரில், ஜப்பான் தலத்திருஅவை ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை அமைதிக்கான செப நாள்களைக் கடைப்பிடிக்கின்றது. 2ம் உலகப் போரின்போது, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு வீசப்பட்டதையும், ஆகஸ்ட் 9ம் தேதி, நாகசாகியில் 2வது அணுகுண்டு வீசப்பட்டதையும் நினைவுகூர்ந்து அமைதிக்காகச் செபிப்பதற்காக இந்நாள்கள் குறிக்கப்பட்டுள்ளன.

2015ம் ஆண்டு, 2ம் உலகப் போர் முடிவடைந்ததன் எழுபதாம் ஆண்டு நிறைவுறும் நிகழ்வு கடைப்பிடிக்கப்படுவதால், இவ்வாண்டின் இச்செப நாள்கள் முக்கியமானவையாக அமையும் என்று ஆயர் Kikuchi அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.