2015-08-01 16:26:00

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் வாரம் ஆகஸ்ட் 1-7


ஆக.01,2015. தாய்ப்பால் ஊட்டுவது, தாய்க்கும் குழந்தைக்கும் இடையே மிக நெருக்கமான உறவை ஏற்படுத்துவதால், தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் வாரம் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து 7ம் தேதி வரை உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள இவ்வாண்டின் இந்த உலக வாரம், தாய்ப்பால் ஊட்டுவதற்கு உலகின் அனைத்துப் பெண்களும் தங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் ஐந்து தாய்மார்க்கு நால்வர், தாய்ப்பால் ஊட்டுவதற்கு வெட்கப்படுகின்றனர் என்றும், 18.8 விழுக்காட்டுத் தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள் என்றும் ஐ.நாவின் யூனிசெப் நிறுவனம் மேற்கொண்ட  ஆய்வில் தெரியவந்துள்ளது.

 குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் குறித்து ஆய்வு செய்துள்ள யூனிசெப் நிறுவனம், இந்திய அளவில் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டும் பெண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் இது மிகவும் குறைவு என்றும், படித்த பெண்கள் மிகவும் குறைவாக உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் இது ஐம்பது விழுக்காடு என்றும் கூறியுள்ளது.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் 5 வயதுக்குள் நடக்கும் 13 விழுக்காடு இறப்புகளைக் குறைக்க முடியும். அவ்வாறு பார்த்தால் தமிழகத்தில் ஓராண்டில் 3,600 குழந்தைகளின் இறப்பைத் தவிர்க்க முடியும் என்றும் யூனிசெப் கூறியுள்ளது.

இது குறித்து ‘யுனிசெப்’ நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில தலைவர் ஜோப் சக்கரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தாய்ப்பால் ஊட்டுவதின் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். குறிப்பாக, கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பணியிடங்களில் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : Agencies/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.