2015-08-10 17:05:00

சீனாவில் பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள் 6 கோடிக்கு மேல்


ஆக.10,2015. சீனாவின் கிராமப் பகுதிகளில் பெற்றோர் நகரங்களுக்கு வேலை தேடிச் செல்வதால் 6 கோடியே 10 இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் கைவிடப்பட்டு அனாதைகளாக வாழ்வதாக இஞ்ஞாயிறன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவின் People's Daily என்ற அரசு தினத்தாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெற்றோரின்றி பிள்ளைகள் வாழ்வதால், பிள்ளைகள் மன அழுத்தத்தில் வாழ்வதாகவும், சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உட்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hunan மாநிலத்தின் Huangjing கிராமத்தில் அன்னையர் இல்லாமல் 132 குழந்தைகள் இருக்கின்றன. இந்தக் கிராமத்துக்கு தாய்கள் அற்ற கிராமம் என்ற அடைமொழியே சூட்டப்பட்டுவிட்டது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

சீனாவில் வறுமையின் காரணமாக, பிழைப்புக்காக நகரங்களுக்குச் செல்லுதல் போன்ற பல காரணங்களால், குழந்தைகளை வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுவிட்டு பெற்றோர் வெளியூர்களுக்கு சென்று விடுவதால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் 18 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 3 கோடிச் சிறாருக்கு வீடுகளில் பெற்றோர் இல்லை என்றும், 20 இலட்சம் சிறார் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழலில் வாழ்கின்றனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

சீனாவில் 26 கோடிக்கு மேற்பட்டோர் குடியேற்றதாரத் தொழிலாளர்கள்.  

ஆதாரம் : PTI /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.