2015-08-11 16:02:00

எல் சால்வதோரில் வன்முறை நிறுத்தப்பட திருஅவை அழைப்பு


ஆக.11,2015. பஞ்சம், பொருளாதார நெருக்கடி, கடும் சமூக மோதல்கள், அதிகரித்துவரும் வன்முறை போன்றவற்றால் எல் சால்வதோர் நாட்டில் மக்களின் துன்பநிலை அதிகரித்துவருவது கவலை தருவதாய் உள்ளது என்று திருத்தந்தை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறியுள்ளவேளை, எல் சால்வதோர் தலத்திருஅவையும் நாட்டில் அமைதி ஏற்பட இஞ்ஞாயிறன்று விண்ணப்பித்தது.

எல் சால்வதோரில் வன்முறை அதிகரிக்கின்றதே தவிர நிறுத்தப்படவில்லை என்றும், கடந்த பத்து நாள்களில் ஐந்து பேருந்து ஓட்டுனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதற்கு சக்திவாய்ந்த குற்றக்கும்பல்களே காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சான் சால்வதோர் பேராலயத்தில் ஞாயிறு திருப்பலி நிறைவேற்றிய சான் சால்வதோர் பேராயர் ஹோசே லூயிஸ் எஸ்கோபார் அவர்கள், விசுவாசிகள் தங்கள் நம்பிக்கையைத் தளரவிடாமல், இறைவனின் கருணையில் நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

எல் சால்வதோரில் ஒரு நாளைக்கு 15.8 பேர் வீதம், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 2,865 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

மேலும், முத்திப்பேறு பெற்ற பேராயர் ஆஸ்கார் ரொமெரோ அவர்களின் மண்ணில் நீதியும் அமைதியும் மீண்டும் மலர தான் செபிப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.