2015-08-27 15:54:00

4,800 சூடான் குழந்தைகளுக்கு கல்வி ஆண்டு துவக்கம்


ஆக.27,2015. கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பும், கத்தோலிக்க துயர் துடைப்பு சேவையும் இணைந்து, எத்தியோப்பியாவில் அமைத்துள்ள பள்ளிகளில், 4,800க்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் தங்கள் கல்வி ஆண்டை துவங்கியுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

தெற்கு சூடானிலிருந்து எத்தியோப்பியாவிற்குள் தஞ்சம் புகுந்திருக்கும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கென்று Kule மற்றும் Terkendi ஆகிய ஊர்களில் அமைந்துள்ள முகாம்களில் நான்கு பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.

2013ம் ஆண்டு முதல் தெற்கு சூடானில் நிலவிவரும் உள்நாட்டுப் போரினால் நாட்டைவிட்டு வெளியேறியுள்ள மக்களுக்கு இந்தப் பள்ளிகள் பெரும் ஆசீர்வாதமாக அமைந்துள்ளன என்று அப்பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, அருள்பணி Angelo Moreschi அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஐ.நா.வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, சூடான் நாட்டு போரினால், 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், இவர்களில் 8,21,000 பேர் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.