2015-08-27 16:04:00

ஆப்ரிக்க அகதிகள் 500 பேர் இஸ்ரேல் நாட்டில் விடுதலை


ஆக.27,2015. எரித்ரியா மற்றும் சூடான் நாடுகளிலிருந்து இஸ்ரேல் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு அரசால் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஆப்ரிக்க அகதிகள் 500 பேர், ஆகஸ்ட் 25, இச்செவ்வாயன்று விடுவிக்கப்பட்டனர்.

எபிரேய மொழிபேசும் கத்தோலிக்கர்களின் முதுபெரும் தந்தையின் பிரதிநிதியாக எருசலேமில் பணியாற்றிவரும் இயேசு சபை அருள்பணியாளர், David Neuhaus அவர்கள், இம்மக்கள் சிறைபடுத்தப்பட்டிருந்தது, மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு செயல் என்று குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்தொரைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் விண்ணப்பங்களையும், அணுகிவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டையும் நினைவில் கொண்டு, எருசலேமில் உள்ள தலத்திருஅவை, விடுவிக்கப்பட்ட இம்மக்களுக்கு தன் இல்லத்துக் கதவுகளைத் திறப்பது, அர்த்தமுள்ள முயற்சியாகும் என்று அருள்பணி Neuhaus அவர்கள் விண்ணப்பித்தார்.

எரித்ரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் நிலவும் மோதல்களினால் அந்நாடுகளைவிட்டு இஸ்ரேல் நாட்டில் மக்கள் தஞ்சம் புகுந்தவர்களை, இஸ்ரேல் அரசு, வேலைதேடி வந்தவர்கள் என்றே அழைத்து வருவதாகவும், வேற்றுநாட்டவரின் வருகையைத் தடுக்க, இஸ்ரேல் அரசு, எகிப்தின் எல்லையில் வேலியைக் கட்டியுள்ளது என்றும், ICN கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / ICN /வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.