2015-08-27 16:13:00

இலங்கையில் பறிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தமிழ் மக்களுக்கு


ஆக.27,2015. இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், சம்பூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்பட்ட நிலங்களை, 300 குடும்பங்களுக்கு இலங்கை அரசுத் தலைவர், மைத்ரிபால சிறிசேனா அவர்கள், மீண்டும் வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை அரசுத் தலைவர், சிறிசேனா அவர்கள், இலங்கை மக்கள் அனைவரும் சகோதர, சகோதரிகளாக அச்சமின்றி வாழ்வோமாக என்று கேட்டுக் கொண்டார்.

தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்த அரசுத் தலைவர் சிறிசேனா அவர்கள், அப்பகுதியில் 1000 வீடுகள், அரசால் கட்டித் தரப்படும் என்றும், இவற்றில் 240 வீடுகளுக்கு, இந்திய அரசும், 280 வீடுகளுக்கு, ஐ.நா.வின் UNICEF மற்றும் UNHCR ஆகிய இரு நிறுவனங்களும் நிதி உதவி செய்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு சனவரி மாதம் அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற சிறிசேனா அவர்கள், தமிழர்களின் நிலங்கள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியின் ஒரு வெளிப்பாடு இது என்றும்,  தங்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இது ஒரு சிறிய ஆரம்பம் என்றும், தமிழ் குடும்பங்கள் கூறிவருகின்றன. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.