2015-08-27 14:58:00

கடுகு சிறுத்தாலும் – பதில் தெரிந்தாலும் மௌனமாய் இருந்தால்..


ஒரு சமயம் ஒரு நாட்டில், வேதியல் அறிவியலாளர், உயிரியல் நிபுணர், மின்சாரப் பொறியலாளர் ஆகிய மூவருக்கும் மின்இருக்கையில் அமர்த்தி மரண தண்டனை நிறைவேற்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. பொதுவாக மரண தண்டனை கைதிகளிடம் கடைசி நேரத்தில் கேட்பதுபோல், இந்த மூவரிடமும், தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர் கேட்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றும் ஆள், முதலில் வேதியல் அறிவியலாளரிடம், நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று கேட்டார். அவர் ஒன்றும் இல்லை என்றார். உடனே அந்த ஆள், மின்இருக்கையின் பொத்தானை அழுத்தினார். ஆனால் அது வேலை செய்யவில்லை. அந்நாட்டின் சட்டப்படி, ஒருமுறை தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால், குற்றவாளி விடுவிக்கப்பட வேண்டும். அதனால்  வேதியல் அறிவியலாளர் விடுவிக்கப்பட்டார். அதேபோல் உயிரியல் நிபுணரிடமும் அவரின் கடைசி ஆசை கேட்கப்பட்டது. அவரும் ஒன்றும் இல்லை என்றார். உடனே மின்இருக்கை பொத்தான் அழுத்தப்பட்டது. அப்போதும் அது வேலை செய்யாததால் அவரும் விடுவிக்கப்பட்டார். மூன்றவதாக, மின்சாரப் பொறியலாளர் மின்இருக்கைக்கு அழைத்து வரப்பட்டார். உங்களுக்குச் சொல்லிக்கொள்ள ஏதாவது இருக்கிறதா என்று தண்டனை நிறைவேற்றும் ஆள் கேட்டார். உடனே அவர், ஆமாம், அந்த சிவப்பு மற்றும் நீல நிற வயர்களை ஒன்றாக இணைத்தால் இந்த நாற்காலி வேலை செய்யும் என்றார். அவர் சொற்படி வயர்கள் இணைக்கப்பட்டு மின்இருக்கையின் பொத்தானும் அழுத்தப்பட்டது. மின்சாரப் பொறியலாளர் கருகிப் போனார். ஆம். விடை தெரிந்தாலும், சில நேரங்களில் மௌனமாய் இருப்பது நல்லது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.