2015-08-28 15:40:00

டப்ளினில் 'இயற்கையைப் பாதுகாப்பதற்கான உலக செப நாள்’


ஆக.28,2015. வருகிற செப்டம்பர் முதல் தேதி, அதாவது வருகிற செவ்வாய்க் கிழமையன்று சிறப்பிக்கப்படவிருக்கும் 'இயற்கையைப் பாதுகாப்பதற்கான உலக செப நாள்’ திருவழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு அனைத்துக் கிறிஸ்தவ சபையினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்து பேராயர் ஒருவர்.

கான்ஸ்டான்டிநோபிள் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுடன் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாக, டப்ளின் திருச்சிலுவை ஆலயத்தில் நடைபெறும் 'இயற்கையை பாதுகாப்பதற்கான செபத்தில், டப்ளின் நகரின் எல்லாக் கிறிஸ்தவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் டப்ளின் பேராயர் Diarmuid Martin.

மேலும், செப்டம்பர் முதல் தேதி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருப்பீட அதிகாரிகள் அனைவருடன் இணைந்து இயற்கையை பாதுகாப்பதற்காகச் செபிக்கவுள்ளார்.

இந்நாள்களில் மனித சமுதாயம் எதிர்நோக்கிவரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு, நம் பங்களிப்பை வழங்க ஆவல் கொண்டுள்ள இவ்வேளையில், உலகிலுள்ள தலத்திருஅவைகள் இந்நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனைச் சிறப்பிக்க பல்வேறு வழிகளில் திட்டங்களைத் தீட்டியுள்ளன எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.