2015-08-28 15:55:00

திருஅவை-சிறாரை பாலியல் வன்மையிலிருந்து பாதுகாக்க வேண்டும்


ஆக.28,2015. பாகிஸ்தானில் சிறார் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவது பரவலாக இடம்பெற்றுவரும்வேளை, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது திருஅவையின் கடமை என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தானில் 2014ம் ஆண்டில் மட்டும் 3,500க்கும் மேற்பட்ட சிறார் பாலியல் வன்கொடுமைக்கும், பிற உரிமை மீறல்களுக்கும் உள்ளாகியுள்ளனர் என்றும், இந்த உரிமை மீறல்களில் 67 விழுக்காடு கிராமப் பகுதிகளில் இடம்பெற்றவை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை அறிக்கை வெளியிட்டுள்ளதோடு, சிறாரைப் பாதுகாக்குமாறு அரசுக்கு மனு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது.

கடும் பாலியல் வன்கொடுமைக்கு சிறாரை உட்படுத்தும் காணொளிப் படங்களை, குற்றக் கும்பல் ஒன்று, கடந்த பத்து ஆண்டுகளாக சந்தைகளில் விற்பது, அண்மையில் பஞ்சாப் மாநில அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 வயதுக்கும் 14 வயதுக்கும் உட்பட்ட சிறார் குறித்த ஏறக்குறைய 400 காணொளிப் படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பின்னர் சிறாரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று திருஅவையும், பிற நிறுவனங்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.