2015-08-28 15:45:00

வியட்நாமில் 18,298 சிறைக் கைதிகளுக்கு விடுதலை


ஆக.28,2015. வியட்நாம் நாடு, பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்ற 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 34 வெளிநாட்டவர் உட்பட 18 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக வியட்நாம் அரசு இவ்வெள்ளியன்று அறிவித்தது.

செப்டம்பர் 02, வருகிற புதன்கிழமையன்று கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 ஆயிரத்து 298 கைதிகள், தொகுதி தொகுதியாக விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் உதவித் தலைவர் Le Quy Vuong அவர்கள் கூறினார்.

கொலைகள், மனிதக் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களும் இவர்களில் உள்ளனர், ஆனால் இவர்களில் எவரும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாதவர்கள் என்றும் கூறினார் Le Quy Vuong.

ஆயினும், அரசியல் குற்றங்களுக்காக சிறைகளில் உள்ளவர்கள் யாருக்கும் மன்னிப்பு அளிக்கப்படமாட்டாது என்றும் Le Quy Vuong அவர்கள் கூறியுள்ளார்.

வியட்நாமில் 2009ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பெரிய அளவிலான பொது மன்னிப்பில் 20,599 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

ஆதாரம் : Agencies/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.