2015-08-29 15:03:00

ஞானமுள்ள அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு தேசிய மீட்பு அரசு தேவை


ஆக.29,2015. பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய ஞானமுள்ள அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு தேசிய மீட்பு அரசு ஈராக் நாட்டுக்குத் தேவைப்படுகின்றது என்று, அந்நாட்டு கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.

ஈராக் நாட்டை அவசரகால நிலையிலிருந்து வெளிக்கொணரவும், நாட்டின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ள முரண்பட்ட சக்திகளை எதிர்க்கவும் அவசியமான சீர்திருத்தங்களை எடுத்து நடத்துவதற்குத் திறமைபடைத்த ஞானமுள்ள அரசியல்வாதிகள் தேவைப்படுகின்றனர் என்றும் கூறினார் முதுபெரும் தந்தை சாக்கோ.

இவ்வாறு ஈராக்கின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இவ்வியாழனன்று கடிதம் அனுப்பியுள்ள முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள், நாட்டின் பல்வேறு இன மற்றும் மதங்களின் அடிப்படையில் இராணுவத்தில் படைவீரர்கள் சேர்க்கப்படுவது முக்கியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த விண்ணப்பங்களை வலியுறுத்தும் கடிதத்தை, ஈராக் அரசுத்தலைவர் Fuad Masum, பிரதமர் Haider al Abadi, நாடாளுமன்றத் தலைவர் Salim Abdullah al-Jubouri ஆகிய மூன்று தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.

இக்கடிதத்தின் பிரதி ஒன்றை குர்திஸ்தான் மாநில அவையின் சபாநாயகர் Yusuf Mohammed Yusuf Sadiq அவர்களுக்கும் அனுப்பியுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், குர்திஸ்தான் பகுதியின் அரசியல் அமைப்பு அவசரத்தில் எழுதப்படக் கூடாது என்றும், அப்பகுதியில் வாழும் பல்வேறு இனத்தவரின் தனித்துவத்தை மதிப்பதாய் அது இருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.