2015-09-14 17:09:00

மத நம்பிக்கையில் வேறுபடுபவரிலும், ஒத்தக் கருத்துக்கள் உண்டு


செப்.14,2015. மத நம்பிக்கை உடையோருக்கும், நம்பிக்கையற்றோருக்கும் இடையே, 5 நாள் கருத்தரங்கு, இத்தாலியின் அசிசி நகரில் இடம்பெறவிருப்பதை முன்னிட்டு, இத்திங்களன்று, திருப்பீடத்தில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

திருப்பீட கலாச்சார அவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கைக் குறித்து பத்திரிக்கையாளர்களிடம், இத்திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் ஜியான்ஃப்ராங்கோ இரவாசி ஆவர்கள் பேசியபோது, தாங்கள் கொண்ட மத நம்பிக்கையில் வேறுபடும் மக்களிடையே, பல ஒற்றுமைகள், ஒத்தக் கருத்துக்கள் உள்ளன என்பதை நிரூபிக்கும் வகையில் இக்கருத்தரங்கு அமையும் என்று கூறினார்.

எகிப்து சுல்தானுடன் உரையாடுவதற்கு எவ்விதத் தயக்கமும் காட்டாத அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் செயல் குறித்தும் தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் இரவாசி அவர்கள், நாம் அனைவரும் ஆதாமின் குழந்தைகளாக இருந்து, ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாக உள்ளோம் என்பதால், உடன்பிறந்தோர் பிணைப்பை ஒருவர் மற்றவருக்கிடையேக் கொண்டுள்ளோம் என்றும் எடுத்துரைத்தார்.

இம்மாதம் 23ம் தேதி முதல், 27ம் தேதி முடிய, அசிசி நகரில் இடம்பெறவிருக்கும் 5 நாள் கருத்தரங்கில், மனித குலம் கொள்ளவேண்டிய அக்கறை குறித்து, கலாச்சார, அரசியல், மற்றும் கலை ஆகியத் துறைகளைச் சேர்ந்த 90 பேர் கலந்துகொண்டு, 48 அமர்வுகளை நடத்துவர் என்றும், இக்கூட்டங்களில் கலந்துகொள்ள பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.