2015-09-15 16:19:00

அனைத்துலக அணுசக்தி அமைப்பு கூட்டத்தில், பேராயர் Gallagher


செப்.15,2015. அமைதி நடவடிக்கைகளுக்கும், ஒன்றிணைந்த மனிதகுல வளர்ச்சிக்கும் உதவும் நோக்கத்தில், அணுசக்தியைப் பயன்படுத்தி, அணு ஆய்தக் களைவை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் திருப்பீடம் பாராட்டுவதாக, அனைத்துலக அணுசக்தி அமைப்பில் உரையாற்றினார், பேராயர் Paul Richard Gallagher.

ஆஸ்திரியா நாட்டின் வியென்னாவில் இடம்பெற்ற அனைத்துலக அணுசக்தி அமைப்பின் 59வது பொது அவைக் கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் Gallagher அவர்கள், மக்களின் பாதுகாப்பை முன்னேற்றுவதில் இவ்வமைப்பின் பணிகளை, தன் உரையில் பாராட்டினார்.

IAEA என்றழைக்கப்படும் இந்த அணுசக்தி அமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சக்திகளின் உதவியுடன், ஏழ்மை, நல ஆதரவு, சுற்றுச்சூழல் ஆகியத் துறைகளில் சிறப்புப் பணியாற்றி வருவதையும் சுட்டிக்காட்டினார், பேராயர் Gallagher.

எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியும், மனிதகுல பொறுப்புணர்வு, மதிப்பீடுகள், மற்றும் மனச் சான்றுடன் ஒருங்கிணைந்து செல்லும்போதுதான், அது உண்மையான வளர்ச்சியாக இருக்கமுடியும் என்றும், பேராயர் Gallagher அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.