2015-09-16 17:13:00

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி


செப்.16,2015. சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க, வீடுகள்தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும் என்கிறார், உலக பசுமை வளர்ச்சிக் குழு நிறுவனர், கே.பாலசுப்பிரமணியன்.

மனிதனின் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் தோலைப் போன்று, இந்த பூமியை சூரியனில் இருந்து வரும் தீமை தரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாப்பது ஓசோன் படலம்.

பூமிப் பந்தின் மீது போர்வை போர்த்தியதுபோல படர்ந்துள்ள ஓசோன் படலம், 230 மி.மீ. இருந்து 500 மி.மீ. வரை மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபடுகிறது. இந்தியாவில் ஓசோன் படலத்தின் அடர்த்தி 280 முதல் 300 மி. மீ. வரை உள்ளது. இதன் காரணமாக, பூமியின் சராசரி வெப்ப நிலை உயருகிறது. இதனால் பனிப் பிரதேசங்களில் பனி வேகமாக உருகி, கடல் மட்டம் உயர வழிவகுக்கிறது.

இதுபோன்று ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகளால், சங்கிலித் தொடர் போன்ற அடுக்கடுக்கான விளைவுகளையும், பிரச்சினைகளையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர் அறிவியலாளர்கள்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க, எளிமையாக, வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்க வேண்டும் என, கடந்த 3 ஆண்டுகளாக பிரச்சார இயக்கம் நடத்தியும், 30 ஆயிரம் துளசிச் செடிகளை மக்களுக்கு வழங்கியும், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துளசி குறித்த சிறு வெளியீடுகளை வெளியிட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் திருச்சியைச் சேர்ந்த உலக பசுமை வளர்ச்சிக் குழுவின் நிறுவனரான பாலசுப்பிரமணியன்.

செப்டம்பர் 16, இப்புதனன்று, உலக ஓசோன் நாள் கடைபிடிக்கப்படுகிறது. 

ஆதாரம் : The Hindu / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.