2015-09-21 14:52:00

கியூபா இளையோரிடம் திருத்தந்தை பகிர்ந்த கனவு, நம்பிக்கை


செப்.21,2015. இங்கு கூறப்பட்ட கருத்துக்களில், 'கனவு' என்ற வார்த்தை ஆழமாக நம்மை வந்தடைந்துள்ளது. இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர், 'மக்களுக்கு இரு கண்கள் உள்ளன' என்று கூறியுள்ளார். ஒரு கண், கண்ணாடியால் ஆனது; மற்றொரு கண், சதையால் ஆனது. சதையால் ஆன கண்கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள உண்மையான, எதார்த்தமான உலகைக் காணவேண்டும். கண்ணாடியால் ஆன கண்கொண்டு, கனவுலகைக் காணவேண்டும்.

நம்மைச் சூழ்ந்திருக்கும் எதார்த்த உலகில், கனவுகாணும் திறமையையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகின் எதார்த்தங்களைக் கண்டு, மனம் நொந்து, கண்களை மூடிக்கொள்ள வேண்டாம்; கண்களைத் திறந்து கனவு காண வேண்டும்.

கனவு காண்பதற்குத் தேவையான ஒரு பண்பு, திறந்த மனம். நாமே உருவாக்கியிருக்கும் பிரிவுச் சுவர்களைத் தாண்டி, அடுத்தவருடன் கைகுலுக்க நாம் முயலவேண்டும்.

புவனோஸ் அயிரெஸ் நகருக்கருகே, ஏழ்மையான ஒரு பங்கில், மக்கள் அரங்கம் அமைக்கும் பணியில், பல இளையோர் ஈடுபட்டிருந்தனர். நான் அங்கு சென்றபோது, அவர்கள் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். அவ்விளையோரில் ஒருவர், யூதர், அடுத்தவர், கம்யூனிசக் கொள்கை உடையவர், வேறொருவர், கத்தோலிக்கர்... என்று, அவர்கள் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

பொதுநலன் கருதி, தோழமையின் அடிப்படையில் இளையோர் கூடிவருவது, இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமானது. இவ்விதம் இணைந்து வரமுடியாமல், அமர்ந்து பேசமுடியாமல் போகும்போது, சண்டைகள் உருவாகின்றன. போர்களால் அழிந்துவரும் இவ்வுலகில், உங்களிடம் நான் கேட்பது, இதுதான்... உங்கள் மத்தியில் நட்புறவை வளர்க்க பெரும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

இங்கு நடந்த பகிர்வில் நாம் கேட்ட மற்றொரு வார்த்தை, 'நம்பிக்கை'. இளையோரே இவ்வுலகின் நம்பிக்கை. நம்பிக்கை என்றால் என்ன? வாழ்வளிப்பது, நம்பிக்கை. பலன் தருவது, நம்பிக்கை.

பலன்தருவதைப் பற்றி சிந்திக்கும்போது, உலகெங்கும் வேலையின்றி தவிக்கும் இளையோரை எண்ணிப் பார்க்கிறேன். எத்தனையோ நாடுகளில், 40 முதல், 50 விழுக்காடு இளையோர், வேலையின்றி, நம்பிக்கையின்றி துன்புறுகின்றனர். வேலையின்றி தவிக்கும் இளையோரையும், நம் சமுதாயம், தேவையற்றவர்கள் என்று ஒதுக்கி விடுகிறது.

பணத்தை வழிபடும் இன்றைய உலகில், கருவில் வளரும் குழந்தை, வயதானோர், தீராத நோயுற்றோர் அனைவரும் தேவையற்றவர் என்று ஒதுக்கப்படுகின்றனர். வேலையற்ற இளையோரும் இவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வுலகத்தால் ஒதுக்கபப்ட்ட இளையோர், தீவிரவாதம், வன்முறை, குற்றத்  தொழில்கள் என்று, அழிவை வளர்க்கும் குழுக்களில் இணைகின்றனர். இத்தகைய 'ஒதுக்கும்' கலாச்சாரத்தில் வாழும் நாம், நம்பிக்கையை இன்னும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்.

நம்பிக்கை காட்டும் பாதை எளிதானதல்ல. அப்பாதையில் நாம் தனித்துச் செல்வதும் இயலாது. ஆப்ரிக்காவில் பயன்படுத்தப்படும் ஒரு பழமொழி, இக்கருத்தை வலியுறுத்துகிறது: "நீ வேகமாகச் செல்ல விரும்பினால், தனியேச் செல்; ஆனால், நீ தொலைதூரம் செல்ல விரும்பினால், மற்றவரோடு சேர்ந்து செல்."

'நம்பிக்கை' என்ற கருத்துடன், நான் கூறவிழையும் மற்றோரு கருத்து, 'சந்திக்கும் கலாச்சாரம்'. நாம் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள் என்றாலும், நம்மிலும் உயர்ந்த பல இலக்குகள் உள்ளன. உயர்வான நம் மக்கள், உயர்வான நம் நாடு என்ற இந்த இலக்குகளை அடைய, நாம் அனைவரும் இணைந்து வழி நடக்கவேண்டும்.

கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். நீங்கள் மத நம்பிக்கையற்றவர் என்பதால், செபிக்க இயலாது என்று சொல்வீர்களானால், எனக்கு நல்லவை நடக்கவேண்டும் என்று மனதார விரும்புங்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.