2015-09-28 12:18:00

ஃபிலடெல்ஃபியா சிறைக் கைதிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


செப்.28,2015. அன்பு சகோதர, சகோதரிகளே, நான் ஒரு மேய்ப்பராக, ஒரு சகோதரனாக உங்கள் துன்பகரமான நிலையைப் பகிர்ந்துகொள்ள இங்கு வந்துள்ளேன். நமக்கு வேதனை தருவனவற்றை இறைவனிடம் சொல்லவும், நமக்கு நம்பிக்கை தருவனவற்றிற்கு நன்றி சொல்லி செபிக்கவும் இங்கு வந்துள்ளேன்.

இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவிய காட்சியை எண்ணிப் பார்க்கிறேன். சீடர்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், இயேசு அவர்கள் காலடிகளைக் கழுவினார்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில், பாதைகள் தூசியால் நிறைந்திருந்தன. எனவே, ஒருவர் வீட்டுக்குள் வரும்போது அவர்கள் காலடிகளைக் கழுவுவது வழக்கம். கரடுமுரடான பாதைகளில் நடந்து, காலடிகளைக் காயப்படுத்திக் கொண்டவர்கள் உண்டு.

வாழ்க்கை ஒரு பயணம். அங்கு பல பாதைகள், பல பயணங்கள் உண்டு. அவை நம்மீது தங்கள் சுவடுகளைப் பதித்துவிடுகின்றன. இந்தப் பயணத்தால் காயப்பட்டிருக்கும் நம் காலடிகளை இயேசு கழுவிவிட வருகிறார். நம் காயங்களை குணமாக்க வருகிறார். வாழ்வுப் பாதையில் நம்முடன் நடக்கிறார்.

தூசிகள் நிறைந்த, வரலாறு என்ற பாதையில், 'நம் காலடிகள் அழுக்காவது'தான் வாழ்க்கை. எனவே, நாம் அனைவருமே கழுவப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட வேண்டியவர்கள். நம் காலடிகளை இயேசு கழுவியபின், தன் விருந்தில் அமரும்படி அழைக்கிறார். இந்த விருந்திலிருந்து யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை.

நீங்கள் இங்கு செலவிடும் நேரம், ஒரே ஒரு நோக்கத்திற்காக மட்டுமே உள்ளது. சரியான பாதையில் உங்கள் வாழ்வுப் பயணம் தொடரவும், சமுதாயத்தோடு மீண்டும் நீங்கள் இணையவும் இந்த நேரம் தரப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் நாம் அனைவருமே இணைந்துள்ளோம். ஒருவருக்கொருவர் உதவியாக, உற்சாகமூட்டுவதாக இந்த முயற்சி அமையவேண்டும்.

இந்த மனநிலையை நீங்கள் பெறுவதற்கு கேட்டுக்கொள்கிறேன். புதிய பாதைகள், புதிய வாய்ப்புக்கள், புதிய பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்களாக! நாம் அனைவருமே கழுவப்பட வேண்டியவர்கள். இந்த எண்ணம், நம் அனைவரையும் ஒன்றிணைக்கட்டும்.

நம் காலடிகளைக் கழுவும் இயேசுவைக் கூர்ந்து நோக்குவோம். அவரது அன்பும், உயிர்ப்பும் உங்களை புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.