2015-10-02 16:42:00

2050க்குள் நகரங்களில் 90 கோடிக்கு மேற்பட்ட வயதானவர்கள்


அக்.02,2015. நகர்மயமாதல், வயதானவர் எண்ணிக்கை ஆகிய இரு சவால்களை வருகின்ற ஆண்டுகளில் உலகின் நகரங்கள் எதிர்கொள்ளவுள்ளவேளை, நகரங்களின் உள்கட்டமைப்புகள் மற்றும் பிற வசதிகளை வயதானவர்களும் பயன்படுத்தும் வழிமுறைகளை ஊக்குவிக்குமாறு ஐ.நா. கேட்டுள்ளது.

அக்டோபர் 01, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வயதானவர்கள் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், சமுதாயத்திற்கும், உலகளாவிய வளர்ச்சிக்கும் வயதானவர்கள் அளப்பரிய வளங்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள 2030ம் ஆண்டு வளர்ச்சித் திட்ட இலக்குகளை அமல்படுத்தும்போது, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் உலக மக்கள் தொகையில் ஏற்படவிருக்கும் மாற்றங்களையும் உலகினர் கருத்தில் கொள்ளுமாறு மேலும் கூறியுள்ளார் பான் கி மூன்.

இதற்கிடையே, 2050ம் ஆண்டுக்குள் உலகின் நகரங்களில் 90 கோடிக்கு மேற்பட்ட வயதானவர்கள் இருப்பார்கள் என்றும், இவர்களை ஏற்பதற்கு நகரங்களின் தற்போதைய நிலை போதுமானதாக இல்லை என்றும் ஐ.நா. கூறியுள்ளது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.