2015-10-10 15:17:00

கடுகு சிறுத்தாலும்... குவித்து வைத்தால், நாற்றமெடுக்கும்


‘உலகிலேயே விலை உயர்ந்த வீடு’ என்று 'கின்னஸ்' உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு வீடு, வேறு எந்த முதல்தர நாட்டிலும் கட்டப்படவில்லை. வறுமைப்பிடியில் சிக்கித்திணறும் இந்தியாவில், மும்பையில், கட்டப்பட்டுள்ளது. 6,596 கோடி ரூபாய் (1 பில்லியன் டாலர்கள்) செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் 6 பேர் வாழ்கின்றனர். இவர்களுக்கு பணிபுரிய 600 பேர் அந்த வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்த வீடு, எல்லா வசதிகளும் கொண்டது. இதை வேறுவிதமாக சொல்ல வேண்டுமானால், அந்த வீட்டில் வாழ்பவர்கள், எக்காரணம் கொண்டும் வெளியே வர, தேவையே இல்லை. எல்லாம் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும். இப்படி வாழ்வது, ஒரு வகையில், சிறையில் வாழ்வதுதானே. இந்த வீட்டிற்கு சூட்டப்பட்டுள்ள பேர் என்ன தெரியுமா? அன்டில்லியா. ‘அன்டில்லியா’ என்பது, புராணங்களில் வரும் ஒரு கனவுத் தீவு. தீவு, சிறை... எல்லாமே நம்மைத் தனிமைப்படுத்தும். இந்த மாளிகையும் அப்படித்தான்.

செல்வத்தைக் கொண்டு பிரம்மாண்டமான சிறையை எழுப்பி, அதற்குள் அரியணை ஏறுவதற்குப் பதில், செல்வத்தைப் பகிர்ந்து, மக்கள் மனங்களில் அரியணை ஏறலாம். தோர்டன் வில்டேர் (Thorton Wilder)  என்ற நாடக ஆசிரியர் பணத்தைப் பற்றி கூறியுள்ள ஒரு கருத்து, பயனுள்ளதாக இருக்கும்: "பணம் உரத்தைப் போன்றது. குவித்து வைத்தால், நாற்றமெடுக்கும்; பயனளிக்காது. நிலமெங்கும் தூவப்படும்போதுதான், பயனளிக்கும்." 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.