2015-10-15 14:41:00

கடுகு சிறுத்தாலும் – பண ஆசை யாரையும் விட்டுவைப்பதில்லை


சம்பகா என்கின்ற நகரத்தில் சுத்திரகர்ணா என்ற துறவி வாழ்ந்து வந்தார். அவருடைய பிச்சைப் பாத்திரத்தில் மீதம் வைத்த உணவை அவருடைய வீட்டில் இருந்த எலி துள்ளித் துள்ளிக் குதித்துவிட்டு உண்ணும். அவர் மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது அந்த எலி அவரது கட்டிலுக்கு அருகில் வந்து குதிக்காமல் இருப்பதற்காக அடிக்கடி ஒரு பிரம்பால் தரையைத் தட்டிக்கொண்டே இருப்பார். ஒருநாள் அவருடைய நண்பர் வினாகர்ணா, அந்தத் துறவியின் வீட்டுக்கு வந்தபோது அவரிடம்,  நீங்கள் என்னோடு பேசாமல், ஏன் தரையைத் தட்டிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சுத்திரகர்ணா, தவறாக நினைக்காதீர்கள். இந்த எலி நான் மீதம் வைப்பதைச் சாப்பிட்டுவிட்டு என் முன்னேயே துள்ளித் துள்ளிக் குதிக்கிறது. நாம் பேசுவதை தடை செய்கிறது என்று சொன்னார். வினகர்ணா அந்த எலி குதித்த இடத்தை உற்று நோக்கினார். பிறகு அது குதிப்பதையும் பார்த்துவிட்டு அந்த இடத்தைத் தோண்டச் சொன்னார். தோண்டியபோது அந்த இடத்தில் ஒரு புதையல் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். தரைக்கு அடியில் புதையல் இருந்ததாலும், அந்த இடத்திற்குப் பக்கத்தில் பொந்து தோண்டி வாழ்ந்ததாலும்தான் அந்த இடத்திற்கு வந்ததும் எலி துள்ளித் துள்ளிக் குதித்தது என்று விளக்கம் சொன்னார் வினகர்ணா. எலிகள்கூட பணத்திற்குமேல் படுத்திருந்தால் தங்கள் நிலையை மறந்து துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுகின்றன.

சிந்தனைக்கு... எளிமை என்பது உணவில் இல்லை, உணர்வில் உள்ளது 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.