2015-10-20 14:15:00

கடுகு சிறுத்தாலும்... கவனத்தைவிட, கனவும், துணிவும் தேவை


2002ம் ஆண்டு, அமெரிக்காவின் Salt Lake என்ற நகரில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்றன. Sarah Hughes என்ற 17 வயது இளம்பெண், பனிச்சறுக்கு விளையாட்டில் அதுவரை உலகளவில் எந்தப் பதக்கமும் வென்றதில்லை. அவர் முதல் முறையாக அந்தப் போட்டியில் கலந்துகொண்டதால், எவ்வித எதிர்பார்ப்பும், பயமும், தயக்கமும் இல்லாமல் போட்டிகளில் கலந்துகொண்டு, அபாரமான துணிவுடன் சாகசங்கள் புரிந்தார்.

அவருக்குப் பின் அந்தப் போட்டியில் கலந்துகொண்ட Michelle Kwan என்ற 22வயது இளம்பெண் ஏற்கனவே உலகளவில் பதக்கங்களைப் பெற்றிருந்தவர். அவர் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததால், ஒரு விதக் குறையும் இல்லாமல் தன் சாகசங்களைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் பனிச்சறுக்கு அரங்கத்தில் நுழைந்தார். சிறு தவறும் செய்யக்கூடாது என்ற அவரது அங்கலாய்ப்பால் அவர் தவறுகள் செய்தார். அச்சமின்றி அரங்கத்தில் நுழைந்த Sarah, தங்கப் பதக்கத்தை வென்றார். தவறேதும் செய்யக்கூடாது என்ற கவலையுடன் அரங்கத்தில் நுழைந்த Michelle, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

என்னென்ன செய்யலாம் என்ற கனவோடு, துணிவோடு சென்றவர் Sarah. என்னென்ன செய்யக்கூடாது என்ற கவனத்துடன் சென்றவர் Michelle.

கவனத்தைவிட, கனவும், துணிவும் நம்மை வெகு தூரம் அழைத்துச் செல்லும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.