2015-10-26 16:13:00

94 தீர்மனங்களுடன் மாமன்ற ஏடு திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பு


அக்.,26,2015. இம்மாதம் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை இடம்பெற்ற உலக ஆயர் மாமன்றத்தின் 94 தீர்மானங்கள் அடங்கிய ஏடு, பெரும்பான்மை அங்கத்தினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, திருத்தந்தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குடும்பம் குறித்த இம்மாமன்றத்தின் முடிவுகளை ஏற்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவற்றை உன்னிப்பாக வாசித்த பின்னர், தன் கருத்துக்களை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்துக் குடும்பங்களின் மகிழ்வையும், நம்பிக்கைகளையும், சோகங்களையும், எதிர்பார்ப்புகளையும் மனதில்கொண்டு, இரக்கத்தின் உண்மை அர்த்தத்தைக் காண்பித்த இயேசுவின் பாதையில் இந்த 94 தீர்மானங்களையும் எடுத்ததாக, திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஏட்டின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது.

குடும்பங்களுக்கு உதவ விரும்பும் திருஅவை, சில நேரங்களில் குடும்பங்களின் அருகே மௌனமாக நின்று செவிமடுப்பதாகவும், வேறு சில நேரங்களில் குடும்பங்களின் முன்னே சென்று வழி காட்டுவதாகவும், ஏனைய வேளைகளில் அவற்றின் பின் நின்று ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுப்பதாகவும் இருக்கவேண்டும் என அவ்வேடு வலியுறுத்துகின்றது.

திருஅவையின் அனுமதியின்றி மணமுறிவு பெற்று, மறுமணம் புரிந்தவர்களை, திருஅவை, தாய்க்குரிய பண்புடன் புரிந்துகொண்டு வழிநடத்தவேண்டியது குறித்து இவ்வேட்டில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.