2015-10-29 16:40:00

வட இலங்கைக்கான உதவி அரசு வழியாகவே செய்வோம்: அமெரிக்கக் குழு


அக்.29,2015. இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆயினும் அந்த உதவிகள் இலங்கை அரசின் வழியாகவே செய்ய முடியும் என்றும், யாழ்ப்பாணம் வந்திருக்கும் அமெரிக்க குழுவினர் தெரிவித்ததாக, யாழ் ஆயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மூன்றுநாள் பயணமாக இலங்கை வந்துள்ள, உலகப் பெண்கள் விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் கத்தரின் ரஸ்ஸல் அவர்கள், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அதுல் கேஷப்பு, மற்றும் சில அமெரிக்கத்தூதரக அதிகாரிகளும் இப்புதனன்று யாழ்ப்பாணம் வந்து, புதிய ஆயருடன் மேற்கொண்ட சந்திப்பின்போது, விதவைப் பெண்களுடன் பணியாற்றும் அருட் சகோதரிகள், அந்தப் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்க குழுவினரிடம் வலியுறுத்தினார்.

சொந்த வாழ்விடங்களுக்குச் செல்ல முடியாதவர்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்தல், விதவைகளுக்கு அரசிடமிருந்து உரிய முறையில் உதவி கிடைக்காத நிலைமை, யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அரசினால் இயலாவிடில், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களை யாழ் ஆயர் ஞானப்பிரகாசம் அவர்கள், அமெரிக்க குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் குழு, வடமாநில முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களையும் சந்தித்து, கலந்துரையாடியது.

ஆதாரம் :  BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.