2015-10-31 16:11:00

சிரியா போரை நிறுத்த பேச்சுவார்த்தைகள் வியன்னாவில் ஆரம்பம்


அக்.,31,2015. சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன், உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், ஆஸ்திரியாவின் தலைநகர், வியன்னாவில் ஆரம்பித்துள்ளது.

சிரியாவில் போரில் ஈடுபட்டுவரும் வெவ்வேறு தரப்பினருக்கும், வெளியில் இருந்தும், ஆயுதங்கள் வழியாகவும் பல்வேறு காலக்கட்டங்களில் உதவியுள்ள குழுக்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் தற்போது முதன் முறையாக ஈரானும் பங்கேற்கிறது.

சிரியா அதிபரின் எதிர்காலம் பற்றிய கேள்வியில் இரஷ்யா மற்றும் ஈரானின் நிலைபாட்டோடு அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் நிலைப்பாடு முரண்பட்டிருக்கின்ற போதிலும், நாட்டின் பொதுவான நன்மையை கருத்தில் கொண்டு நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என அரசியல் வல்லுனர்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

போர்நிறுத்தத்தைக் கொணர்வது, பொதுமன்னிப்பு வழங்குவது, தேர்தல்களுக்கு வழிவகுக்கும் நடைமுறை வருவதை உறுதிசெய்வது உள்ளிட்ட விடய‌ங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.