2015-11-02 15:44:00

மூவொரு கடவுள் அன்பின் எதிரொலி குடும்பம்-கர்தினால் நிக்கோல்ஸ்


நவ.02,2015. பல்வேறு கடினமானச் சூழல்களில், பிரச்சனைகள் மத்தியில் குடும்பங்களில் நிலவும் உண்மையான அன்பு, மூவொரு கடவுளிடம் விளங்கும் அன்பின் எதிரொலி என்ற வார்த்தைகள் அடங்கிய ஒரு மடலை, Westminster பேராயரான கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

குடும்பம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு, அண்மையில் வத்திக்கானில் நடந்து முடிந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்ட கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், அந்த மாமன்றத்தின் கருத்துக்களை வாழ்வாக்க வேண்டும் என்ற அழைப்புடன் விடுத்துள்ள இந்த மேய்ப்புப்பணி மடல், அனைத்து பங்குக் கோவில்களிலும் நவம்பர் 1, இஞ்ஞாயிறன்று வாசிக்கப்பட்டது என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

பொறுமையாக மற்றவர்களுடன் பயணிப்பது, மற்றவர் கருத்துக்களுக்குச் செவிமடுப்பது, பிறருக்கு நமது நேரத்தையும் கவனத்தையும் ஒதுக்குவது போன்ற உயர்ந்த பண்புகள், ஆயர்கள் மாமன்றத்தில் வெளியாயின என்று கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் இம்மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் கொண்டாடும் அனைத்துப் புனிதர்களின் பரிந்துரையால், நம் குடும்பங்களும், திருஅவை என்ற குடும்பமும் இறைவனின் கருணையைப் பரப்பும் கருவிகளாகச் செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் தன் மேய்ப்புப்பணி மடலை நிறைவு செய்துள்ளார். 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.