2015-11-07 16:18:00

சிரியாவில் கிறிஸ்தவ கலாச்சாரம் அழிவுக்குள்ளாகும் ஆபத்து


நவ.07,2015. சிரியாவின் முக்கிய கிறிஸ்தவப் பகுதியான Sadad  நகரிலிருந்து எண்ணற்ற கிறிஸ்தவர்கள் வெளியேறி வருவதாக கவலையை வெளியிட்டுள்ளார், ஹோம்ஸ் பேராயர் Selwanos Boutros Alnemeh.

Sadad  நகருக்கருகே உள்ள கிராமங்களைக் கைப்பற்றியுள்ள இஸ்லாமிய துருப்புக்கள், கிறிஸ்தவர்களின் பூர்வீக இடமாகிய Sadad  நகரை நோக்கி முன்னேறி வருவதால், அங்கு வாழும் கிறிஸ்தவர்கள், தாக்குதலுக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறி வருவதாக பேராயர் கூறினார்.

ஏற்கனவே 15,000 கிறிஸ்தவர்கள் ஹோம்ஸ் நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அடைக்கலம் தேடியுள்ளதாகவும், Sadad  நகரிலிருந்து மேன்மேலும் வெளியேறி வரும் மக்களுக்கு போதிய உதவிகளை வழங்க முடியாமல் தலத் திருஅவை துன்புறுவதாகவும் கூறினார் பேராயர்  Boutros Alnemeh.

பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களின் முக்கிய குடியிருப்பாக இருக்கும் Sadad நகரில் வாழும் மக்கள், இன்னும், இயேசு பேசிய அரமேயிக் மொழியையே பயன்படுத்துகின்றனர் என்று கூறிய ஹோம்ஸ் பேராயர், இந்நகர் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டால், இப்பகுதியின் கிறிஸ்தவ கலாச்சார பாரம்பரியமே அழிவுக்குள்ளாகும் என்ற அச்சத்தையும் வெளியிட்டார்.

ஆதாரம் : Catholic Culture / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.