2015-11-11 16:49:00

UNESCO நிறுவனத்திற்கு திருப்பீடத்தின் பாராட்டு


நவ.11,2015. நீடித்து, நிலைக்கக்கூடிய அமைதியை, கல்வி, கலாச்சாரம் மற்றும் அறிவியல் வழியே கொணர்வதற்கு, ஐ.நா.வின் கல்வி, கலாச்சார நிறுவனமான UNESCO மேற்கொண்டு வரும் முயற்சிகளை, கத்தோலிக்கத் திருஅவை பாராட்டுகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாரிஸ் மாநகரில் UNESCO நிறுவனம் நடத்தி வரும் ஒரு கூட்டத்தில், அந்நிறுவனத்தில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற அருள்பணி  Francesco Follo அவர்கள், UNESCOவின் முயற்சிகளை முன்னின்று வழிநடத்தும், இவ்வமைப்பின் தலைமை இயக்குனர், Irina Bokova அவர்களுக்கு தனிப்பட்ட பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

உரையாடல் கலாச்சாரத்தின் வழியே சுற்றுச்சூழல் கல்வி, மற்றும், இயற்கையில் நிலவும் சுற்றுச்சூழலும், மனித சமுதாயச் சுற்றுச்சூழலும் என்ற தலைப்புக்களில், அருள்பணி Follo அவர்கள், தன் உரையை வழங்கினார்.

மனிதர்கள் இவ்வுலகின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக, இவ்வுலகைக் காப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் என்பதை திருத்தந்தையர் பலர் கூறியுள்ளனர் என்பதை, அருள்பணி Follo அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பாரிஸ் மாநகரில் நடைபெறவிருக்கும் COP 21 என்ற உலக உச்சி மாநாட்டில், ஐ.நா.வுக்கு, குறிப்பாக, UNESCOவுக்கு அதிகப் பொறுப்புக்கள் உள்ளன என்பதையும் அருள்பணி Follo அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.