2015-11-18 15:20:00

இலங்கையில் தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு


நவ.18,2015. இலங்கையில் தமிழ் 'அரசியல்' கைதிகள் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள், தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி, கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இக்கைதிகளில் 99 பேர் புனர்வாழ்வு பெற்று விடுதலையாக விரும்புவதாக அரசாங்கத்திடம் கோரிக்கை மனுவொன்றை முன்வைத்திருந்தனர்.

இந்த கோரிக்கை தொடர்பாக இத்திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய உயர்மட்டக் கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த முடிவு கைதிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்தே அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலஅவை உறுப்பினர்களும் கைதிகளுக்கு இளநீர் வழங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தனர்.

புனர்வாழ்வு பெற்றபின் கைதிகளுக்கு விடுதலை என்ற முடிவு தங்களுக்கு சற்று ஆறுதல் தருவதாக தனது கணவனை பார்த்துவிட்டு திரும்பிய நாகேஸ்வரி யோகராஜா அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.