2015-11-18 15:29:00

தீவிரவாதத்திற்கு எதிராக, இஸ்லாம் மக்களின் புனிதப் போர்


நவ.18,2015. தீவிரவாதத்திற்கு எதிராக, இஸ்லாம் மக்கள் ‘ஜிஹாத்’ எனப்படும் புனிதப் போரை அறிவிக்கவேண்டும் என்று, இந்தியாவில் வாழும் இஸ்லாமியத் தலைவர், Maulana Mahmood Madani அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

சமுதாயத்தில் நிலவும் அநீதிகளைக் களைவதற்கே புனிதப் போர் நிகழ்த்தப்பட வேண்டும் என்றும், புனிதப் போர் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொல்வது, ஒருநாளும் புனிதப் போராக முடியாது என்றும் மத குரு மதானி அவர்கள் கூறினார்.

இஸ்லாம் என்ற பெயரைப் பயன்படுத்தி, மீண்டும், மீண்டும் தவறுகள் செய்துவரும் தீவிரவாதத்தை ஒழிக்க, அனைத்து இஸ்லாமிய நாடுகளும் முன்வர வேண்டும் என்று மத குரு மதானி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்லாம் மதத்தை நன்கு படித்தறிந்த அறிஞர்கள், தலைவர்கள், மற்றும் உண்மையான இஸ்லாம் மதத்தில் பற்று கொண்ட அனைவரும், உண்மை இஸ்லாம் மதம் அமைதியை விரும்பும் மதம் என்பதை இவ்வுலகம் அறியும்படி செய்யவேண்டும் என்று மத குரு மதானி அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இஸ்லாம் பெயரால் நடைபெற்றுவரும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்த்து, நவம்பர் 18, இப்புதனன்று டில்லி, மும்பை, ஹைதரதாபாத் உட்பட 65 நகரங்களில் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன என்று  Jamiat Ulema-I-Hind அமைப்பின் தலைவர், Maulana Mahmood Madani அவர்கள் அறிவித்துள்ளார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.