2015-11-23 15:42:00

எக்காலத்தையும்விட இக்காலத்திற்கு கருணைப் பண்பு அதிகம் தேவை


நவ.23,2015. உலகெங்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காணப்படும்வேளை,  எக்காலத்தையும்விட இக்காலத்திற்கு கருணைப் பண்பு அதிகம் அவசியம் என்று அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் அந்தோணியோ லூயிஸ் தாக்லே அவர்கள் கூறினார்.

போர்களும், குடிமக்களின் போராட்டங்களும் உலகில் அமைதிக்கும் உறுதியான தன்மைக்கும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ள இந்நாள்களில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நெருங்கிவரும்வேளை வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் தாக்லே அவர்கள் இவ்வாறு கூறினார்.

உலகில் இடம்பெறும் அறிவற்ற வன்முறைகளை நோக்கும்போது, இரக்கம் நிறைந்த பண்பு குறைபடுவதன் விளைவுகளையும் நாம் காண முடிகின்றது என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, கத்தோலிக்கர் மட்டுமல்ல, கத்தோலிக்கர் அல்லாதவர்களின் மனங்களில் இரக்கப் பண்பை விழித்தெழச் செய்யும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

இந்த நம் காலத்தில் இந்தப் பண்பை நாம் எவ்வாறு நிலைநிறுத்தப் போகிறோம் என்ற கேள்வியையும் முன்வைத்தார் பிலிப்பைன்ஸ் கர்தினால் தாக்லே.

பாரிஸ் தாக்குதலையடுத்து மேலும் வன்முறைகள் இடம்பெறக் கூடும் என்ற அச்சத்தில், வத்திக்கான், உரோம் மாநகர் மற்றும் உலகெங்கும் எண்ணற்ற நகரங்களில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.