2015-11-24 15:36:00

உலகளாவிய காலநிலை பேரணிகளில் கலந்துகொள்ளுமாறு பரிந்துரை


நவ.24,2015. இம்மாதம் 29ம் தேதியன்று உலக அளவில் இடம்பெறவுள்ள காலநிலை மாற்றம் பற்றிய பேரணிகளில் பிலிப்பைன்ஸ் மக்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டு ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நவம்பர் 30, வருகிற திங்களன்று பாரிசில் தொடங்கவிருக்கின்ற காலநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டை முன்னிட்டு, வருகிற ஞாயிறன்று உலக அளவில் கத்தோலிக்க சமூகங்கள் ஏற்பாடு செய்துள்ள செப தோழமை பேரணியில் பிலிப்பைன்ஸ் மக்கள் கலந்துகொள்ளுமாறு, அந்நாட்டு கர்தினால் அந்தோணியோ லூயிஸ் தாக்லே அவர்கள் உட்பட ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுற்றுச்சூழலை  மாசுபடுத்தும் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று உலகத் தலைவர்களை வலியுறுத்தும் நோக்கத்தில், இரண்டு கோடிக்கு மேற்பட்டவர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றையும் தயாரிப்பதற்கு இப்பேரணிகளை நடத்தும் கத்தோலிக்க ஆர்வலர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த உலகளாவிய பேரணி இரண்டாயிரத்துக்கும் அதிகமான நகரங்களில் இடம்பெறவுள்ளது.

மேலும், பிலிப்பைன்சில் நிலக்கரி சுரங்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், நிலக்கரிகள் பயன்படுத்துவைத் தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இச்செவ்வாய் முதல் ஐந்து நாள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 188 நிலக்கரி சுரங்கங்களுக்கு பிலிப்பைன்ஸ் அரசு அனுமதியளித்துள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.