2015-11-24 15:26:00

உலகின் 90 விழுக்காட்டுப் பேரிடர்கள் காலநிலை தொடர்புடையவை


நவ.24,2015. உலகில் கடந்த இருபது ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள பெரிய இயற்கைப்  பேரிடர்களில் 90 விழுக்காடு, வெள்ளம், புயல்கள், வெப்பக்காற்று, வறட்சி மற்றும் காலநிலை தொடர்புடையவை என்று ஐ.நா.வின் இயற்கைப் பேரிடர் குறைப்பு அலுவலகம் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது.

காலநிலை தொடர்புடைய பேரிடர்களால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் என்ற தலைப்பில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்த அலுவலகம்(UNISDR), அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகள் அதிக அளவில் இயற்கைப் பேரிடர்களால் தாக்கப்பட்டுள்ளன என்று கூறியது.

கடந்த இருபது ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள பெரிய இயற்கைப்  பேரிடர்களில் 6,457 பேரிடர்களுக்கு, வெள்ளம், புயல்கள், வெப்பக்காற்று, வறட்சி மற்றும் காலநிலை தொடர்புடைய நிகழ்வுகளே காரணம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

1995ம் ஆண்டில் ஐ.நா.வின் முதல் காலநிலை மாற்றம் கருத்தரங்கு இடம்பெற்றதற்குப் பின்னர், உலகில் இயற்கைப் பேரிடர்களால் 6,06,000 பேர் இறந்துள்ளனர், 410 கோடிப் பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், கடந்த இருபது ஆண்டுகளில் 1.891 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.      

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.