2015-11-24 14:48:00

கடுகு சிறுத்தாலும்- அன்புச் சங்கிலியைத் தொடர விருப்பமானால்


2007ம் ஆண்டு, அமெரிக்காவின் Berkeley என்ற நகரில் உணவகம் ஒன்று துவக்கப்பட்டது. "Karma Kitchen - Growing in Generosity" அதாவது, "கர்மா சமையலறை - தாராள மனதில் வளர்ந்திட" என்ற அடிப்படைக் கொள்கையுடன் இயங்கும் இவ்வுணவகத்தின் கிளைகள், அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஜப்பான் ஆகிய நாடுகளின் சில நகரங்களில் இன்று இயங்கி வருகின்றன.

உணவகத்தில் நாம் அமர்ந்ததும், உணவு பரிமாறுபவர், நம்மிடம் உணவு வகைகள் அடங்கிய 'menu' அட்டையைத் தருவார். அந்த அட்டையில் உணவு வகைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்; ஆனால், அவற்றின் விலை குறிப்பிடப்பட்டிருக்காது. நமக்குத் தேவையான உணவு பரிமாறப்படும். இறுதியில் நாம் உண்ட உணவுக்கான 'பில்' வரும். அந்த 'பில்'லைப் பார்த்ததும் நமக்கு ஆச்சரியம். காரணம் என்ன? நாம் உண்ட உணவுக்கு வழங்கவேண்டிய தொகை, 0:00 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த 'பில்'லில், கீழே ஒரு குறிப்பும் கொடுக்கப்பட்டிருக்கும்: "உங்களுக்கு முன் இந்த உணவகத்தில் சாப்பிட்ட வேறொருவர், நீங்கள் உண்ட உணவின் தொகையை ஏற்கனவே செலுத்திவிட்டார். இந்த அன்புச் சங்கிலியை நீங்கள் தொடர விருப்பமானால், உங்களுக்குப் பின் இங்கு உணவருந்தப் போகும் வேறொருவருக்கு நீங்கள் ஒரு தொகையைச் செலுத்த உங்களை அழைக்கிறோம்" என்ற குறிப்பு அந்த 'பில்'லில் காணப்படும்.

"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானாய் வளரும்" என்ற அழகான பழமொழியையும், “கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.” (லூக்கா 6,38) என்று இயேசு கூறிய நற்செய்தி வார்த்தைகளையும் உண்மையாக்கும் முயற்சி இது என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.