2015-11-24 15:08:00

கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசுக்குத் திருப்பயணம்


நவ.24,2015. கென்யா, உகாண்டா மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தை இப்புதன் உள்ளூர் நேரம் காலை 7.45 மணிக்குத் தொடங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

A 330 ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்படும் திருத்தந்தை 7 மணி 15 நிமிடங்கள்  பயணம் செய்து கென்ய தலைநகர் நைரோபி சென்றடையும்போது உள்ளூர் நேரம் மாலை 3 மணியாக இருக்கும்.

நைரோபியில் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவினரைச் சந்தித்தல், தூதரக அதிகாரிகளுக்கு உரையாற்றுதல், பல்கலைக்கழக வளாகத்தில் திருப்பலி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அலுவலகங்களைப் பார்வையிடுதல், சேரிகளைப் பார்வையிடுதல், கென்ய இளையோரைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகளை நிறைவு செய்து நவம்பர் 27, வருகிற வெள்ளி பிற்பகலில், உகாண்டாவின் Entebbe செல்வார் திருத்தந்தை.

உகாண்டா தலைநகர் கம்ப்பாலாவில் அந்நாட்டு மறைசாட்சிகள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு திருப்பலி உட்பட பல்வேறு நிகழ்வுகளை முடித்து, மத்திய ஆப்ரிக்க குடியரசு தலைநகர் Banguiக்கு நவம்பர் 29 வருகிற ஞாயிறன்று செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஆரம்பமாக, Bangui பேராலயத்தில், புனிதக் கதவைத் திறத்தல் உட்பட பயணத் திட்டங்களை நிறைவு செய்து நவம்பர் 30, வருகிற திங்களன்று உரோம் நேரம் மாலை 6.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது வாழ்நாளில் ஆப்ரிக்காவுக்கு முதல் முறையாகச் செல்லவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாடுகளுக்கு அமைதியின் தூதுவராக வருகிறேன் என்று இத்திங்களன்று காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

இம்மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் இத்திருத்தூதுப் பயணம் அவரின் 11வது வெளிநாட்டுத்  திருத்தூதுப் பயணமாக அமைகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.