2015-11-24 15:43:00

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு தெற்காசிய திருஅவை வேண்டுகோள்


நவ.24,2015. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டுமென்று தெற்காசிய திருஅவை குழுக்கள் உலகத் தலைவர்களை வலியுறுத்தியுள்ளன.

இம்மாதம் 30ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை பாரிஸ் நகரில் நடைபெறவிருக்கும் காலநிலை உச்சி மாநாட்டை முன்னிட்டு, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தெற்காசிய நாடுகளின் திருஅவை குழுக்கள் உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த மே மாதத்தில் வெளியிட்ட Laudato si’ என்ற சுற்றுச்சூழல் திருமடலால் தூண்டப்பட்டு, தெற்காசியாவிலுள்ள பல்வேறு திருஅவை குழுக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

டெல்லி உயர்மறைமாவட்டத்தின் Chetanalaya சமூகநலப்பணி மையத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு திட்டங்கள் பற்றிப் பேசிய, அம்மைய இயக்குனர் அருள்பணி சவரி ராஜ் அவர்கள், கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாது, முழு மனித சமுதாயத்திற்குமென்று திருத்தந்தையின் ஒரு திருமடல் இப்போதுதான் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் வறட்சி, வெள்ளம் போன்ற கடும் இயற்கைப் பேரிடர்களுக்கு காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமே காரணம் என்று சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

பல ஆண்டுகளாக மழை மிகக் குறைவாக உள்ள மகராஷ்ட்ர மாநிலத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.