2015-11-24 15:14:00

திருத்தந்தைக்கு ஆப்ரிக்க ஆயர்கள் அமோக வரவேற்பு


நவ.24,2015. இப்புதனன்று  ஆப்ரிக்காவில் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்க காத்திருப்பதாக, SECAM என்ற அனைத்து ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

கானா நாட்டின் Accraவில் கடந்த வெள்ளியன்று கூட்டத்தை நிறைவு செய்த SECAM அமைப்பின் நிலைத்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கென்யா, உகாண்டா மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்து ஆப்ரிக்க ஆயர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க கண்டம், 2015ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி முதல், 2016ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வரை ஒப்புரவு ஆண்டை கடைப்பிடித்து வருகிறது என்றும், இந்த ஒப்புரவு ஆண்டு, 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல், 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி வரை சிறப்பிக்கப்படும் இரக்கத்தின் யூபிலி ஆண்டு காலத்தோடு ஒத்து வருகின்றது என்றும் அவ்வறிக்கை  கூறுகிறது.

இந்த யூபிலி ஆண்டில் ஒருவர் ஒருவரோடு உண்மையாகவே ஒப்புரவு அடைவோம்,  இவ்வாறு செய்வது இரக்கமுள்ள தந்தையாகிய இறைவனிடம் ஒப்புரவடைவதாகும் என்றும், நல்லிணக்க ஒன்றித்த வாழ்வு மற்றும் முன்னேற்றத்தில் இறைவனின் இரக்கத்தைக் கண்டு கொள்கிறோம் என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

பயங்கரவாதத்தைக் கண்டித்துள்ள ஆப்ரிக்க ஆயர்கள், ஆப்ரிக்காவில், குறிப்பாக, புருண்டி, தென் சூடான், மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ சனநாயக குடியரசு, நைஜீரியா, கென்யா, லிபியா, இன்னும் வட ஆப்ரிக்காவின் சில பகுதிகளிலும், உலகின் பிற பகுதிகளிலும் அமைதி மற்றும் ஒப்புரவுக்காக உழைப்பவர்களுடன் தங்களின் தோழமையுணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்.  

அனைத்து ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், அதன் தலைவரான அங்கோலா நாட்டின் Lubango பேராயர் Gabriel Mbilingi அவர்கள் கையெழுத்திட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.