2015-11-24 14:59:00

விவிலியத் தேடல் – பெரிய விருந்து உவமை : பகுதி - 8


கற்பனையில் நாம் ஓர் உணவகத்திற்குச் செல்வோம். உணவகத்தில் நாம் அமர்ந்ததும், உணவு பரிமாறுபவர் நம்மிடம் உணவு வகைகள் அடங்கிய 'menu' அட்டையைத் தருகிறார். அந்த அட்டையில் உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன; ஆனால், அவற்றின் விலை குறிப்பிடப்படவில்லை. நமக்குத் தேவையான உணவைக் குறிப்பிடுகிறோம். சுவையான உணவு பரிமாறப்படுகிறது. இறுதியில், நாம் உண்ட உணவுக்கான 'பில்' வருகிறது. அந்த 'பில்'லைப் பார்த்ததும் நமக்கு ஆச்சரியம். காரணம் என்ன? நாம் உண்ட உணவுக்கு வழங்கவேண்டிய தொகை, 0:00 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்டுள்ளவை அனைத்தும் கற்பனையல்ல, உண்மை. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், Berkeley என்ற நகரில் இத்தகைய உணவகம் ஒன்று 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. "Karma Kitchen - Growing in Generosity" அதாவது, "கர்மா சமையலறை - தாராள மனதில் வளர்ந்திட" என்ற அடிப்படைக் கொள்கையுடன் இயங்கும் இவ்வுணவகத்தின் கிளைகள், அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஜப்பான் ஆகிய நாடுகளின் சில நகரங்களில் இன்று இயங்கி வருகின்றன.

Karma Kitchen உணவகங்களில் நாம் உண்ட உணவின் மதிப்பு 0:00 டாலர்/ரூபாய்/யென் என்று கூறும் அந்த 'பில்'லில், கீழே ஒரு குறிப்பும் கொடுக்கப்படுகிறது: "உங்களுக்கு முன் இந்த உணவகத்தில் சாப்பிட்ட வேறொருவர், நீங்கள் உண்ட உணவின் தொகையை ஏற்கனவே செலுத்திவிட்டார். இந்த அன்புச் சங்கிலியை நீங்கள் தொடர விருப்பமானால், உங்களுக்குப் பின் இங்கு உணவருந்தப் போகும் வேறொருவருக்கு நீங்கள் ஒரு தொகையைச் செலுத்த உங்களை அழைக்கிறோம்" என்ற குறிப்பு அந்த 'பில்'லில் காணப்படுகிறது.

உணவகத்தில் நாம் உண்ணும் உணவை பணம் என்ற எண்ணிக்கையால் மதிப்பிடாமல், மனதில் எழும் அன்பு, நன்றி போன்ற உணர்வுகளால் மதிப்பிட நம்மால் முடியும் என்ற அடிப்படை வாழ்வியல் கொள்கையுடன் இயங்குவது, 'கர்மா கிச்சன்' உணவகங்கள். இந்த உணவகங்களுக்கு, 'கிச்சன்' அதாவது ‘சமையலறை’ என்று பெயரிட்டிருப்பது பொருத்தமாகத் தெரிகிறது.

நம் இல்லங்களில், பல மென்மையான, உண்மையான, உன்னதமான உணர்வுகளின் பிறப்பிடம், சமையலறை. நாம் சமையலறையில் உணவு தயாரிக்கும்போது, பாத்திரத்தில் போடும் ஒவ்வொரு பொருளின் விலை என்ன, என்று பார்த்துப் பார்த்து சமைப்பதில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எவ்வகையில் சமைத்தால் அனைவரின் உடல்நலத்திற்கும் நல்லது என்ற கனிவும், கரிசனையுமே நம் சமையலறைகளில் அதிகம் இருக்கும்.

இதே எண்ணங்கள், உணர்வுகள் ஓர் உணவகத்திலும் நிலவினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் உருவானதே 'கர்மா கிச்சன்' முயற்சி. 'கர்மா கிச்சன்' முயற்சியைப் பற்றி நாம் இன்று பேசுவதற்கு முக்கியக் காரணம், 'பெரியவிருந்து உவமை'யின் இரண்டாம் பகுதியில், வறியோரை, உடல் ஊனமுற்றோரை, வீதிகளில் அலைவோரை வீட்டுத்தலைவர் விருந்துக்குக் கொணர்ந்தார் என்று இயேசு கூறும் கருத்துக்கள்.

உவமை'யின் முதல் பகுதியில், அழைக்கப்பட்டவர்கள் சொன்ன அர்த்தமற்ற சாக்குப் போக்குகளை, சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். பணியாளர் இந்தச் சாக்குப் போக்குகளை தம் தலைவரிடம் அறிவித்ததும், அங்கு நடந்ததை இயேசு இவ்விதம் விவரிக்கிறார்:

லூக்கா நற்செய்தி 14: 21-24

வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், 'நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்', என்றார். பின்பு பணியாளர், 'தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது' என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, 'நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்' என்றார்.

இந்த உவமையின் முதல் பகுதியில் அழைப்பும் மறுப்பும் என்ற கருத்தைச் சிந்தித்தபோது, நம் வாழ்வில் இறைவன் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்புக்களை எண்ணிப் பார்க்க இவ்வுவமை நல்லதொரு வாய்ப்பை உருவாக்குகிறது என்று கூறினோம். இந்த உவமையின் இரண்டாம் பகுதியில், பலனை எதிர்பாராமல் காட்டும் பரிவு, அன்பு இவற்றைப் பற்றிச் சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவும் நாம் வாழ்வில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டிய ஓர் உண்மை.

‘கர்மா கிச்சன்’ என்ற அந்த முயற்சிக்குத் திரும்புவோம். அந்த உணவகத்தில் சாப்பிடும்போது, நம் உணவுக்கு உரிய விலையை வேறு யாரோ கொடுத்துள்ளார் என்றும், நாம் கொடுக்கவிரும்பும் தொகையால் வேறு யாரோ உணவருந்தப் போகிறார் என்றும் உணரும்போது, பலனை எதிர்பாராமல் காட்டும் அன்பு எவ்வளவு உன்னதமானது என்று புரிந்துகொள்கிறோம். பகவத் கீதையில் "தன்னலமற்ற, ஆசையற்ற செயல்" என்பதைக் கூறும் “Nish kama karma” என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இந்த வார்த்தைகள்தான் “Karma Kitchen” என்ற பெயருக்குக் காரணமாக அமைந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மனிதவாழ்வின் அனைத்து முயற்சிகளும் பணத்தின் அடிப்படையில் மதிக்கப்படுகின்றன. நம் அவசரத்தேவையில் ஒருவரிடமிருந்து பெறும் பணத்தை 'கடன்' என்று சொல்கிறோம். அதாவது, அந்தப் பணத்தைத் திருப்பித்தரும் 'கடமை' நமக்கு இருப்பதை, 'கடன்' என்ற வார்த்தை உணர்த்துகிறது. அதேபோல், ஒருவரிடமிருந்து பெறும் பொருள், அல்லது, அவர் செய்யும் பணி அனைத்துமே பணம் என்ற அடிப்படையில் அளக்கப்படும்போது, அங்கும் 'pay back' அதாவது, 'திருப்பித் தருவது' என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது.

'Pay back' அதாவது, 'திருப்பித் தருவது' என்ற சொற்றொடர், பல நேரங்களில், 'பழிக்குப் பழி' என்ற எண்ணத்தைக் கூறவும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நமது திரைப்படங்களில் வில்லன்களைத் தீர்த்துக்கட்ட 'ஹீரோ' புறப்படும்போது, 'pay-back time' அதாவது, 'திருப்பித்-தரும்-நேரம்' என்று சொல்லியபடியே கிளம்புவார். இந்த 'சினிமாத்தனமான' எண்ணம், நடைமுறை வாழ்விலும் ஊடுருவியுள்ளது என்ற உண்மை, நமக்கு வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது.

நவம்பர் 13ம் தேதி, பாரிஸ் நகரில்  நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஒரு பதிலடியாக பல்வேறு நாடுகள் IS இஸ்லாமிய அரசின் மீது மேற்கொண்டுள்ள இராணுவத் தாக்குதல்களை, 'pay-back time' என்று ஒரு சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது, ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது.

'Pay back' அதாவது, 'திருப்பித் தருவத'ற்குப் பதில், 'Pay forward', அதாவது, 'முன்னோக்கித் தருவது' என்ற எண்ணம் இருந்தால் எப்படி இருக்கும்? எதையும் பதிலுக்கு எதிர்பார்க்காமல், நாம் கொடுக்க ஆரம்பிப்பதைத்தான், 'Pay forward', 'முன்னோக்கித் தருவது' என்ற சொற்றொடர் குறிப்பிடுகிறது. இந்த எண்ணமானது ஒரு சங்கிலித் தொடரைப் போல வளர்ந்தால், இவ்வுலகம் பல கொடுமைகளிலிருந்து விடுதலை பெறமுடியும்.

இந்த ஒரு சிந்தனையில் உருவானதுதான், 'Karma Kitchen' என்ற முயற்சி. 'முன்னோக்கிக் கொடுப்பது' என்பது, முற்றிலும் புதிதாக உருவான எண்ணம் அல்ல. நமது பழமொழிகளில் ஒன்று, இதை பல நூற்றாண்டுகளுக்கு முன் நமக்குச் சொல்லித் தந்துள்ளது. "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானாய் வளரும்" என்ற அந்த அழகான பழமொழியை நாம் மறந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இதையொத்த இயேசுவின் கூற்றை, லூக்கா நற்செய்தி 6ம் பிரிவில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.” (லூக்கா 6: 38)

'முன்னோக்கித் தருவது' என்ற எண்ணம், உலகில் நிலவும் பழிக்குப் பழி என்ற உணர்வையும் குறைக்கும் என்று நான் நம்புகிறேன். அதாவது, பழி வாங்கத் துடிப்பவரை, அந்த நிலைக்கு உள்ளாக்கிய காரண, காரியங்களை, வருத்தங்களை அறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளை, 'முன்னோக்கித் தருவது' என்று எண்ணிப் பார்க்கலாம். தீவிரவாதம் என்ற ஒர் உணர்வு, பொழுதுபோக்காக, விளையாட்டாக, இவ்வுலகில் உருவாகவில்லை. அந்த உணர்வுக்குப் பின்புலத்தில் பல காயங்கள் உள்ளன. அந்தக் காயங்கள் உருவாவதைத் தடுக்க உலக அரசுகள் முயற்சிகள் எடுக்காத காரணத்தால்தான், தீவிரவாதம் தலைதூக்கியது என்பது, உலகறிந்த உண்மை.

ஒவ்வொரு முறையும் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும்போது, 'திருப்பித் தருவது' என்ற பாணியில், மேலும் அடக்கு முறைகளையோ, பதில் தாக்குதல்களையோ மேற்கொள்வதற்குப் பதில், தீவிரவாதம் எழுவதற்கு காரணமான வறுமை, பட்டினி, அநீதி, சமுதாயப் பாகுபாடுகள் என்ற குறைகளைத் தீர்க்க, 'முன்னோக்கித் தருவது' என்ற பாணியில், முயற்சிகள் எடுப்பது நல்லதுதானே! இதைத்தான், திருத்தந்தை பிரான்சிஸ் உட்பட, பல உலகத் தலைவர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர்.

அழைத்தவர்கள் வராததால், நோயுற்றோர், வறியோர், உடல் ஊனமுற்றோர் ஆகியோரை விருந்துக்கு அழைத்துவரச் சொல்லி, வீட்டுத் தலைவர் கட்டளையிட்டார் என்று இயேசு தன் உவமையின் இரண்டாம் பகுதியில் கூறியுள்ளார். இதே எண்ணத்தை, தன்னை விருந்துக்கு அழைத்தவரிடம் ஏற்கனவே ஓர் அறிவுரையாக இயேசு கூறியிருந்தார். அழைப்புக்கு அருகதை அற்றவர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள், தங்கள் அழைப்புக்கு மறு அழைப்பு தர முடியாதவர்கள் ஆகியோரை அழைப்பது உயர்ந்த விருந்தோம்பல் என்றும், இது இறைவன் வழங்கும் விருந்துக்கு ஒத்தது என்றும் அவர் கூறியிருந்தார்:

லூக்கா நற்செய்தி 14: 12-14

பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர்... விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தில் செபம், உண்ணாநோன்பு, தர்மம் என்ற மூன்று முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும் என்று தாய் திருஅவை நமக்குச் சொல்லித் தருகிறார். இந்த முயற்சிகளை மக்கள் பார்க்குபடி செய்வது வீண் என்றும், இவற்றை இறைவனுக்கு மட்டுமே தெரியும்படி செய்வது சிறந்ததென்றும் இயேசு சொன்னார். குறிப்பாக, நாம் செய்யும் தர்மங்கள் இறைவனுக்கு மட்டும் தெரிந்தால் போதும், அடுத்தவருக்குத் தெரியவேண்டாம் என்பதை வலியுறுத்த, இயேசு ஓர் அழகிய உருவகத்தையும் மத்தேயு நற்செய்தியில் கூறியுள்ளார். இந்த உருவகம் உலகப் புகழ்பெற்ற வார்த்தைகளாக இன்றும் பலருக்கு வழிகாட்டுகிறது. இயேசு கூறிய வார்த்தைகள் இதோ:

மத்தேயு நற்செய்தி 6: 3-4

நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

நம் தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவை, அடுத்தவருக்கு மட்டுமல்ல, நம் உடலின் ஏனைய பகுதிகளுக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்ற மிக உயர்ந்ததொரு சவாலை இயேசு நம் முன் வைக்கிறார். மனித சமுதாயத்தை ஓர் உடலாகக் கற்பனை செய்துபார்த்தால், அந்த உடலின் பல பகுதிகளாக வாழும் பல்லாயிரம் நல்ல உள்ளங்கள், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், நன்மைகளைச் செய்துவருவதை நாம் அறிவோம். எவ்வித விளம்பரமும் இன்றி, இந்த நல்ல உள்ளங்கள் ஆற்றும் பணிகளாலேயே மனித சமுதாயம் என்ற உடல், இன்றளவும் நலமுடன் வாழ்கிறது. இத்தகைய நல்ல உள்ளங்களின் முயற்சிகள், இவ்வுலகில் பலுகிப் பெருக, 'பெரியவிருந்து உவமை' ஒரு தூண்டுதலாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இவ்வுவமையில் நம் தேடலை நிறைவு செய்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.