2015-11-25 16:01:00

திருத்தந்தையின் ஆப்ரிக்கப் பயணம் குறித்து உகாண்டா பேராயர்


நவ.25,2015. பல மறைசாட்சிகளின் பூமியாக திகழும் உகாண்டா நாட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூதுப் பயணத்திற்குத் தெரிவு செய்திருப்பது, இந்நாட்டு மக்களை மகிழ்வால் நிறைத்துள்ளது என்று, கம்பாலா பேராயர், சிப்ரியன் கிசிட்டோ லுவாங்கா (Cyprian Kizito Lwanga) அவர்கள் கூறியுள்ளார்.

கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆகிய மூன்று ஆப்ரிக்க நாடுகளில் இப்புதன் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதைக் குறித்து, பேராயர் லுவாங்கா அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு வழங்கியுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'ஆப்ரிக்காவின் முத்து' என்று புகழ்பெற்ற உகாண்டா நாட்டிற்கு, திருத்தந்தையரான அருளாளர் 6ம் பவுல் மற்றும் புனித 2ம் யோவான் பவுல் ஆகியோரைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் நாட்டுக்கு வருகை தரும் மூன்றாவது திருத்தந்தை என்பதை, பேராயர் லுவாங்கா அவர்கள் தன் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமது பொது இல்லமான இப்பூமியைக் காப்பது குறித்து, அழகான எண்ணங்களை தன் திருமடலில் வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயற்கையைப் பாதுகாக்கும் விண்ணப்பத்தை, உகாண்டா மக்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது என்று பேராயர் லுவாங்கா அவர்களின் கட்டுரை எடுத்துரைக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.