2015-11-25 15:16:00

மத்திய ஆப்ரிக்க குடியரசு – ஒரு கண்ணோட்டம்


நவ.25,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றாவதாகச் செல்லும் நாடு, மத்திய ஆப்ரிக்க குடியரசு. மத்திய ஆப்ரிக்க குடியரசு தலைநகர் Banguiக்கு நவம்பர் 29 வருகிற ஞாயிறன்று செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ். CAR எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் மத்திய ஆப்ரிக்க குடியரசின் எல்லைகளாக, வடக்கே சாட், கிழக்கே சூடான், தெற்கே காங்கோ குடியரசு மற்றும் காங்கோ சனநாயகக் குடியரசு, மேற்கே கேமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. 2014ம் ஆண்டின் நிலவரப்படி இந்நாட்டின் மொத்த மக்கள்தொகை 47 இலட்சமாகும். மத்திய ஆப்ரிக்காவிலுள்ள இந்நாட்டின் மொத்த பரப்பளவு ஏறக்குறைய 6,20,000 சதுர கிலோமீட்டர்கள். மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகவும், ஆப்ரிக்காவின் 10 வறிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்நாடு, உலகின் 43வது பெரிய நாடாகும். இதன் மக்கள் தொகை 4,303,356 ஆகும். இவர்களில் 11 விழுக்காட்டினர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 இனக் குழுக்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். அனைத்து இனக்குழுக்களும் தமது மொழியைக் கொண்டுள்ளன.

ஏரிகள், வெப்பமண்டலக் காடுகள், குறிப்பிடத்தக்க சாகுபடி நிலங்கள், உரேனியம், கச்சா எண்ணெய், தங்கம், வைரம், அனல்மின்சக்தி உட்பட பல வளங்களைக் கொண்டிருந்தாலும், இந்நாடு, உலகின் மிகவும் வறிய பத்து நாடுகளில் ஒன்றாக உள்ளது. 2013ம் ஆண்டின் மனித வளர்ச்சி குறியீட்டின்படி, இந்நாடு, 187 நாடுகளில் 185வது இடத்தில் உள்ளது.  இதற்கெல்லாம் காரணம் இந்நாட்டில் ஒரு நிலையான சனநாயக ஆட்சியமைப்பு இல்லாததே. தற்போதும் இடைக்கால அரசே ஆட்சியில் உள்ளது. இந்நாடு, 1960ம் ஆண்டில் பிரான்சிடமிருந்து முழுமையாகச் சுதந்திரம் பெற்றதிலிருந்து பல ஆட்சிக் கவிழ்ப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்படாத அதிபர்களே இந்நாட்டை ஆட்சி செய்துள்ளனர். குறிப்பாக, 1965ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஆட்சிக் கவிழ்ப்பு நடத்திய இராணுவ அதிபர் Jean-Bédel Bokassa, பேரரசராக தன்னையே அறிவித்து கொடூரமாக ஆட்சி செய்தார். இவர் டேவிட் டாக்கோ என்பவரால் 1979ம் ஆண்டில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். ப்ரெஞ்ச் இராணுவமும் இதற்கு உதவியது. மீண்டும் தொடர் ஆட்சிக் கவிழ்ப்புக்கள். 2007 மற்றும் 2011ம் ஆண்டுகளில் அமைதி ஒப்பந்தங்கள் இடம்பெற்றன. அதையும் விடுத்து, 2012ம் ஆண்டில் அரசுக்கும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவக் குழுக்களுக்கிடையே சண்டை தொடங்கியது. இது, பெருமளவு இன மற்றும் சமய அழிவை ஏற்படுத்தின. 2014ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. அமைதி காக்கும் படைகள் அந்நாட்டில் பணியைத் துவங்கின.

இப்படி அமைதியின்றி இருக்கும் மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லவிருப்பதை முன்னிட்டு, போர் நிறுத்தம் அவசியம் என்று சமயத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நாட்டின் தலைநகர் Bangui பேராலயத்தில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஆரம்பமாக, நவம்பர் 29, வருகிற ஞாயிறன்று புனிதக் கதவைத் திறந்து வைப்பார் திருத்தந்தை. அமைதியின்றி தவிக்கும் இந்நாட்டில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் ஒப்புரவையும், இரக்கத்தையும் கொண்டுவரும் என்று நன்மனம் கொண்ட எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். நாமும் அதற்காகச் செபிப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.