2015-11-25 16:12:00

வன்முறையின் பிடியிலிருந்து விடுதலைப் பெற விழையும் நாடு


நவ.25,2015. மத்திய ஆப்ரிக்கக் குடியரசை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூதுப் பயணத்திற்குத் தேர்ந்துள்ளார் என்ற அறிக்கை, 'ஏழையின் அழுகுரலை ஆண்டவன் கேட்கிறார்' என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ள எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்று பாங்கி (Bangui) பேராயர், Dieudonne Nzapalainga அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 25, இப்புதன் முதல், 30, வருகிற திங்கள் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளில் மேற்கொள்ளும் 11வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, பேராயர் Nzapalainga அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரை, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் வெளியாகியுள்ளது.

"வன்முறையின் பிடியிலிருந்து விடுதலைப் பெற விழையும் நாடு" என்ற தலைப்பில் பேராயர் Nzapalainga அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரையில், வறுமைப்பட்டு, வன்முறையில் சிக்கியுள்ள தங்கள் நாட்டிற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலமுறை செபித்து வந்துள்ளதை, நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.

பாங்கி உயர் மறைமாவட்டத்தின் பேராலயத்தில் அமைந்துள்ள புனிதக் கதவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்துவைப்பது, மிகவும் பொருளுள்ள, பொருத்தமான ஒரு செயல் என்று குறிப்பிட்ட பேராயர் Nzapalainga அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, முழுமையான மனமாற்றம் பெற திருத்தந்தையின் பயணம் உதவியாக அமையும் என்ற நம்பிக்கையை தன் கட்டுரையில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.