2015-11-26 15:18:00

கென்யா நாட்டு அருள் பணியாளர், துறவியருடன் திருத்தந்தை


நவ.26,2015. என் சகோதர அருள் பணியாளர்களே, இருபால் துறவியரே, அருள்பணிக்கென பயிற்சி பெறுவோரே, கென்யா நாட்டிற்கும், தலத்திருஅவைக்கும் நீங்கள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன்.

இந்த சந்திப்பில் கலந்துகொள்ள முடியாத உங்கள் சகோதர சகோதரிகள், குறிப்பாக, உடல் நலக் குறைவால் இங்கு வரமுடியாதவர்களுக்கு என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்.

"உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார்" (பிலிப்பியர் 1:6) என்று கூறும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுடன் இணைந்து, நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

நோயுற்றோர், வறியோர், சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் நடுவில் நீங்கள் ஒவ்வொருநாளும் உழைக்கும்போது, இறைவனின் கருணையை பறைசாற்றுகிறீர்கள்.

கடவுளிடமிருந்து வரும் கொடையான உங்கள் அழைப்பை பேணிக் காக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட, குழும, மற்றும் திருவழிபாட்டு செபங்கள் எங்கள் ஒவ்வொரு நாள் வாழ்வின் மையமாகட்டும். உலகப் பார்வையிலிருந்து மறைந்து, செபம் மேற்கொண்டுள்ள துறவியருக்கு என் தனிப்பட்ட நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

அருள் பணிக்கென பயிற்சிபெறும் இளையோரே, இறைவனின் திரு உளத்தைத் தேடவும், அதை முழுமையாகப் பின்பற்றவும் இந்த பயிற்சி ஆண்டுகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நாட்கள் உங்களை ஆன்மீக மகிழ்வில் நிறைக்க வேண்டும்.

அன்பு நண்பர்களே, நாம் போதிக்கும், மற்றும் வாழ முற்படும் நற்செய்தி, எளிதான பாதை அல்ல, அது மிகக் குறுகலான பாதை.

"உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடிவருகிறேன்" (பிலிப்பியர் 1:4) என்ற புனித பவுல் அடியாரின் வார்த்தைகளை நானும் கூறுகிறேன். எனக்காக செபிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.