2015-11-28 14:19:00

உகாண்டா இளையோருக்கு திருத்தந்தை வழங்கிய உரை


நவ.28,2015. அன்பு இளம் நண்பர்களே, உகாண்டா தலத்திருஅவை உயிரோட்டம் கொண்டுள்ளது என்பதையும், இங்குள்ள இளையோர் நலமான எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதையும் இளையோர் வின்னி, எம்மானுவேல் இவர்களின் சாட்சியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உங்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தவும், அன்பு செய்யத் தூண்டிவிடவும் விரும்புகிறேன்.

கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, அனைத்தையும் நேர்மறையாகக் காணும் கண்ணோட்டம் மட்டுமல்ல, அது கிறிஸ்துவில் வேரூன்றியிருக்கும் புது வாழ்வு. நீங்கள் வாழ்வில் துன்பங்களைச் சந்திக்கும்போது, கிறிஸ்துவின் அன்பில் உங்களையே நிலைகொள்ளச் செய்யுங்கள். இத்தகைய அருள் உங்கள் அனைவரிலும் வளரும்படி இந்தப் பிற்பகல் வேளையில் செபிக்க உங்களை அழைக்கிறேன்.

நீங்கள் வாழ்வில் சந்திக்கும் தடைகளைப் பற்றி சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஒரு சிறு குழந்தை நடந்துசெல்லும் வழியில் சகதி நிறைந்த ஒரு குழியைப் பார்த்தால், அதைக் கடக்க முயற்சி செய்துவிட்டு, பின்னர் தன் தந்தையை உதவி செய்ய அழைக்கிறது. தந்தை அக்குழந்தையைத் தூக்கி, அக்குழியின் மறுபுறம் சேர்த்துவிடுகிறார். அதேபோல் நாம் சந்திக்கும் தடைகளைக் கடக்க இறைவனை நாடினால், அவர் வந்து நம்மைத் தூக்கி கரை சேர்ப்பார். நாம் அனைவருமே, திருத்தந்தையையும் சேர்த்துத்தான் சொல்கிறேன், தந்தையின் உதவியைக் கூவி அழைக்கும் குழந்தைகள் போல இருக்கிறோம்.

நீங்கள் சந்திக்கும் ஓர் ஆபத்தான குழி, உங்களிடையே உள்ள உறவுகள். ஒரு நல்ல தாயாக, மனைவியாக, அல்லது ஒரு தந்தையாக, கணவராக வாழ்வது ஆபத்தான குழியைப் போலத் தெரியலாம். ஆனால், அந்தக் குழியிலேயே நம் கவனத்தைச் செலுத்தினால் பயனில்லை. அந்தக் குழியைச் சமாளிக்க, அதை வெற்றியுடன் கடக்க, இறைவனைக் கூவி அழையுங்கள். அவர் கட்டாயம் வந்து உதவி செய்வார்.

நீங்கள் சந்திக்கும் மற்றொரு குழி, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கமுடியுமா என்ற அச்சம். ஆப்ரிக்கக் கலாச்சார மதிப்பீடுகளுக்கு எதிரான கருத்துக்களை உள்வாங்கும்படி உங்களுக்கு இருக்கும் அழுத்தங்களுக்கு இடம்கொடாமல், உங்கள் கலாச்சார நன்னெறி விழுமியங்களைப் பின்பற்றுவது உங்களை வேற்றுமைப்படுத்திக் காட்டும் என்ற அச்சம் உள்ளது. உங்களைச் சுற்றி பிறர் வெளிநாட்டுக் கலாச்சார மதிப்பீடுகளுக்கு இடம்கொடுத்து செல்லும்போது, நீங்கள் நன்னெறி மதிப்பீடுகளுடன் வாழ அஞ்சவேண்டாம்.

அன்பு இளம் நண்பர்களே, உங்கள் முகங்களைக் காணும்போது நான் நம்பிக்கையால் நிறைகிறேன். நீங்கள் ஞானத்திலும், நன்மைத் தனத்திலும், தாராள மனதிலும் வளர, தூய ஆவியார் உங்களைத் தூண்டி வழி நடத்துவாராக! நீங்கள் சந்திக்கும் ஆபத்தான குழிகளில், இறைவன் உங்களைத் தூக்கி கரை சேர்ப்பார் என்பதை மறவாதீர்கள்!

எனக்காக செபிக்க மறவாதீர்கள்! உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.