2015-11-30 15:29:00

பாங்கி இறுதி திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை


நவ.30,2015. பாங்கி நகரின் Barthélémy Boganda விளையாட்டுத் திடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, "நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன" என்று திருத்தூதர் பவுல் அறிக்கையிட்டதை இன்றைய வாசகத்தில் கேட்டோம். மத்திய ஆப்ரிக்காவிற்கு நற்செய்தியைக் கொணர்ந்த பணியாளர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

துயரங்களும், போராட்டங்களும் நிறைந்து, எதிர்காலம் உறுதியில்லாததுபோல் தோன்றும் வேளைகளில், இறைவனின் பிரசன்னத்தில் கூடிவருவது, ஆறுதல் தருகிறது. மறுகரைக்குச் செல்வோம் வாருங்கள் என்று இறைவன் நம்மை அழைக்கிறார். (காண்க. லூக்கா 8:22)

மறுகரை என்பது மறுவாழ்வைக் குறிக்கிறது. இவ்வுலகப் பயணத்தின் இறுதியில் கிடைக்கும் மறுவாழ்வு, ஒரு மாயை அல்ல. இவ்வுலகில் நாம் வாழும்போது, மறுகரை என்பது, இவ்வுலகிலேயே நம் வாழ்வில் நடக்கும் மாற்றங்கள்.

தன் பிரசன்னத்தால் தொடர்ந்து சக்தியும் ஆற்றலும் தரும் இறைவனுக்கு நன்றி சொல்வோம். பல்வேறு துன்பங்கள் மத்தியிலும், நம் குடும்பங்களில், நம் சமுதாயங்களில் ஒருங்கிணைந்து வருவதால் நாம் பெறும் சக்திக்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

நமக்கு இறைவன் தரும் துணிவுக்காகவும் நன்றி சொல்வோம். நம்மிலிருந்து வேறுபட்டோருடன் நட்பையும், உரையாடலையும் வளர்க்க, இறைவன் தரும் நல் எண்ணங்களுக்காக நன்றி சொல்வோம். கடந்த சில ஆண்டுகளில் உங்கள் குடும்பங்களிலும், சமுதாயத்திலும் நீங்கள் மேற்கொண்ட அனைத்து ஒற்றுமை முயற்சிகளுக்காகவும் நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

நாம் இன்னும் நமது இலக்கை அடையவில்லை. நம் பழைய பாவ நிலையை விடுத்து, புது வாழ்வை நோக்கிச் செல்ல தொடர்ந்து அழைக்கப்படுகிறோம்.

புனிதம் நோக்கிச் செல்லும் பாதையில் கிறிஸ்தவ சமுதாயம் இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டியுள்ளது என்பது நமக்குத் தெரியும். உங்கள் நாட்டில் துவங்கியுள்ள இரக்கத்தின் யூபிலி, இந்த ஒப்புரவு பயணத்தை மேற்கொள்ள உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு.

கிறிஸ்துவின் அழைப்பு வந்ததும், திருத்தூதர் ஆந்திரேயா, தன் சகோதரர் பேதுருவுடன் சேர்ந்து, "உடனே... தங்கள் படகையும், தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்" (மத்தேயு 4:20). கிறிஸ்துவின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், ஆர்வமும் அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டின. நாமும், திருத்தூதர்களைப் போல், எதிர்காலத்தை நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் அணுகிவர வேண்டும்.

மறுகரை அருகில் உள்ளது. இயேசு நம்முடன் இருக்கிறார். மத்திய ஆப்ரிக்க கிறிஸ்தவர்களே, நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து, உங்கள் நாட்டின் மறுமலர்ச்சிக்கு உழைக்க நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள்.

தன் மகனின் பாடுகளில் உடன் நின்று, அவரது மகிழ்விலும் பங்குபெற்ற மரியன்னை, உங்களைக் காத்து, ஊக்கம் அளிப்பாராக! ஆமென்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.