2015-12-03 15:31:00

இலங்கையில் ஒப்புரவைக் கொணர, மதத் தலைவர்களின் உதவி


டிச.03,2015. இலங்கையில் ஒப்புரவைக் கொணர, அரசும், ஏனைய அமைப்புக்களும் உறுதியுடன் உழைப்பது, தங்கள் நாட்டு வரலாற்றில் புதியதொரு பிரிவை எழுத உதவியாக உள்ளது என்று கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார்.

நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பேராயம், உரோமை உர்பானியா பல்கலைக் கழகத்தில் நவம்பர் 30ம் தேதி முதல், டிசம்பர் 3ம் தேதி முடிய ஏற்பாடு செய்திருந்த 19வது நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், ஃபிதேஸ் (Fides) செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இலங்கையின் அரசுத் தலைவர், மைத்ரிபால சிறிசேனா அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து, நாட்டில் அமைதியையும், ஒப்புரவையும் கொணர, மதத் தலைவர்களின் உதவியை நாடிவருகிறார் என்பதை கர்தினால் இரஞ்சித் அவர்கள், தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஒப்புரவு என்பது, உண்மை, நீதி என்ற விழுமியங்களின் அடிப்படையில் உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்திய கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்த ஒப்புரவு முயற்சியில் மதத் தலைவர்களின் பங்கு மிக இன்றியமையாதது என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.