2015-12-07 15:30:00

தமிழகத்தில் ஆறு இலட்சம் ஏக்கர் பயிர் சேதம்


டிச.07,2015. தமிழ்நாட்டின் மத்திய டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழையின் காரணமாக ஏறக்குறைய ஆறு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாய அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் கடந்த ஒரு மாதகாலமாகவே இலட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் நெல்வயல்கள் நீரில் மூழ்கியிருப்பதாகக் கூறும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வீ.சுப்பிரமணியன் அவர்கள், நெற்கதிர்கள் பால்பிடிக்கும் சமயத்தில் இப்படி நீரில் மூழ்கியிருந்தால் நெல்மணிகள் பதராகிவிடும் என்று அச்சம் வெளியிட்டார்.

வழக்கத்தைவிட அதிக மழை இந்த ஆண்டு பெய்தது தற்போதைய பாதிப்புக்கு ஒரு காரணம் என்றாலும், காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான நாகையில் கடந்த சில ஆண்டுகளாகவே தூர்வாறாமல் இருந்ததும்கூட இந்த அளவு வெள்ளத்தில் பயிர்கள் மூழ்க முக்கிய காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

எட்டுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த மழைக்கு பலியாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நெல்வயல் நாசமான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். 

ஆதாரம் : பிபிசி/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.