2015-12-09 15:58:00

செஞ்சிலுவை, மற்றும் செம்பிறை கூட்டத்தில் பேராயர் தொமாசி


டிச.09,2015. மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்யும் பணிகள் பல நேரங்களில் சட்ட திட்டங்கள், தொழில்நுட்பங்கள் என்ற வலைகளில் சிக்கி, தாமதமாகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

டிசம்பர் 8, இச்செவ்வாய் முதல், 10, இவ்வியாழன் முடிய ஜெனீவாவில் நடைபெறும் செஞ்சிலுவை, மற்றும் செம்பிறை பன்னாட்டுக் கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்றுவரும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

பெரும் நெருக்கடியானச் சூழல்களில் செஞ்சிலுவை, மற்றும் செம்பிறை அமைப்பினர் ஆற்றிவரும் உன்னதப் பணிகளை திருப்பீடம் பாராட்டுவதோடு, இவ்வமைப்பினரோடு இணைந்து பணியாற்றியுள்ளது என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கினி, லிபேரியா, சியேரா லியோனே நாடுகளில், எபோலா நோயின் ஆபத்து உருவானபோது, தங்கள் பாதுகாப்பையும், உயிரையும் பொருட்படுத்தாது, அப்பகுதிகளில் உழைத்த தன்னார்வத் தொண்டர்களுக்கு உலகளாவிய முறையில் பாராட்டும், நன்றியும் வழங்கப்படவேண்டும் என்று பேராயர் தொமாசி அவர்கள் வலியுறுத்தினார்.

மனிதாபிமானம், நடுநிலை, சுதந்திரம், ஒற்றுமை, உலகளாவிய நிலை என்ற விழுமியங்களின் அடிப்படையில், இடர் நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை திருப்பீடம் வரவேற்கிறது என்பதை, பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

இன்று நிகழும் பல்வேறு மனிதாபிமான பேரிடர்களின் பின்னணியில் பல்வேறு சக்திகள் செயலாற்றுவதால், மக்களுக்கு உதவிகள் சென்றடைவதில் தடைகளும் தாமதங்களும் பெருகியுள்ளன என்பதையும் பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.