2015-12-21 16:11:00

சிரியா, நிக்கராகுவா, கோஸ்டா ரிக்காவில் அமைதிக்கு அழைப்பு


டிச.21,2015. சிரியா, லிபியா, நிக்கராகுவா, கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளில் அமைதி நிலவவும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டை தான் பாராட்டுவதாகத் தெரிவித்த திருத்தந்தை, நம்பிக்கை நிறைந்த விருப்பத்துடனும், மனத்தாராள உணர்வுடனும் இந்த அமைதிப் பாதையில் தொடர்ந்து செயல்படுமாறு விண்ணப்பித்தார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள சிரியா குறித்த அமைதித் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு, அனைத்துலக சமுதாயம் தெளிவான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், லிபியாவில் தேசிய ஒன்றிப்பு அரசு, அண்மையில் கொண்டுவந்துள்ள திட்டம் அந்நாட்டின் எதிர்காலத்தில் நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளது, இத்திட்டம் வெற்றியடையுமாறும் செபிக்கக் கேட்ட திருத்தந்தை, நிக்கராகுவா மற்றும் கோஸ்டா ரிக்கா நாடுகளுக்கிடையே சிதைந்திருந்த உறவுகள் சீர்செய்யப்படுமாறும் கூறினார்.

இவ்விரு நாடுகளுக்கிடையே இடம்பெற்ற எல்லைப் பிரச்சனைக்குக் கடந்த வாரத்தில்  பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பற்றிக் குறிப்பிட்டு, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு வழியாக இவ்விரு நாடுகளும் உடன்பிறந்த உணர்வை வளர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.