2015-12-21 15:48:00

சிறுபான்மை இனத்தவரைக் கொல்வது இனப்படுகொலை


டிச.21,2015. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். இஸ்லாமிய அரசு அமைப்பால், சிறுபான்மை மதத்தினர் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும், ஓர் இனப்படுகொலை என்று கருதவேண்டும் என்று ஐ.நா.விடம் அழுத்தம் கொடுக்குமாறு, பிரிட்டனின் அறுபதுக்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களிடம் கோரியுள்ளனர்.

யஜிதிகள் போன்ற சிறுபான்மை மதத்தினர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான, திட்டமிட்ட பாலியல் வன்செயல்கள், கடத்தல்கள் மற்றும் ஒட்டுமொத்த படுகொலைகளில் ஐ.எஸ் அமைப்பு ஈடுப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எழுதிய தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் புரிந்துவரும் கொடூரங்களுக்குத் தண்டிக்கப்படுவார்கள் என்ற செய்தி ஐ.எஸ் அமைப்பினரைச் சென்றடைய வேண்டும் என்றும் அக்கடிதம் கோருகிறது.

இதற்கிடையே, சிரியாவில் ஐ.எஸ் இஸ்லாமிய அரசின் ஆயுதக் குழுவினர் அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளால் தோற்கடிக்கப்பட்டால், அக்குழுவின் வெற்றிடத்தை நிரப்ப குறைந்தது 15 கிளர்ச்சிக் குழுக்கள் தயாராக உள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகின்றது.

ஆதாரம் : பிபிசி/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.