2015-12-24 12:14:00

கடுகு சிறுத்தாலும் – முகத்தில் கண் உண்டு, அகத்தில்...... ?


எப்பொழுதும் மதுரை சித்திரை திருவிழா போல் கூட்டம் நிரம்பி வழியும் அந்த தெருவில், ஒருவர் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். யாருமே அவரை கண்டுகொள்ளவில்லை. பணம் வேண்டி அவர் தன்னையே துன்புறுத்திக்கொண்டிருந்தார். அவர் அருகில் அவரின் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது. அவருக்கு உதவ எண்ணி அவரிடம் பத்து ரூபாய் கொடுத்தார் மோகன். அந்த இடத்திற்கு அருகில் ஒரு கண் தெரியாத முதியவர் பொம்மைகள் விற்றுக்கொண்டிருந்தார். அவர் மோகனை அழைத்து, இருபது ரூபாய் கொடுத்து, சாட்டையால் அடித்துக் கொண்டிருக்கும் நபரிடம் கொடுக்கச் சொன்னார்.

‘அய்யா! நீங்களே கடினப்பட்டு உழைக்கிறீங்க. உங்களுக்கே சரியான வியாபாரம் இல்லை. அப்படி இருந்தும் அவருக்கு உதவுறீங்களே. உங்கள் சக்திக்கு இருபது ரூபாய் கொஞ்சம் அதிகம்’ என்று சொன்னார் மோகன்.

அதற்கு அந்த முதியவர் சொன்னார்: ‘அந்தக் குழந்தை பசியால் அழுகிறது. அந்த அழுகையை கேட்கையில் மனசு வலிக்கிறது. இந்தக் கடை வீதியில் குறைந்த பட்சம் இருபது ரூபாய்க்குதான் எந்த உணவும் கிடைக்கும். இருபது ரூபாய் கிடைப்பதற்காக அந்தத் தந்தை சாட்டைகளால் அடித்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் அந்த அடி அந்தப் பிஞ்சுக் குழந்தையின் வயிற்றில் தான் விழுகிறது. பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும், அதனால்தான் அதிகமாக உதவினேன். நான் கொடுத்த காசு, அந்த குழந்தைக்கு ஒரு வேளை உணவை தரும் என்ற திருப்தி, நான் எவ்வளவு சம்பாதித்தாலும் எனக்கு கிடைக்காது’ என்றார். மெய் சிலிர்த்துப் போனார் மோகன்.

பரம்பரை பணக்காரர் கூட காசை சேகரிப்பதில் தான் குறியாக இருக்கிறாரே ஒழிய, இல்லாதவர்களுக்கு உதவத் தயங்குகின்றனர். தாங்கள் சேகரிக்கும் பணத்தை கோவில் உண்டியலிலும், சாமியார்களின் காலடியிலும் தான் போடுகிறார்கள். ஆனால் அடித்தட்டு மக்களோ, மற்றவரின் தேவை அறிந்து உதவுகிறார்கள். ஏனெனில், அவர்களும் இந்தப் பசி போராட்டத்தோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதால்.

"உதவி செய்த முதியவருக்கு முகத்தில் கண் இல்லை, ஆனால், மற்றவர்களின் துன்பம் உணரும் கண், அகத்தில் இருந்தது." 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.