2016-01-02 15:42:00

மனிதஉரிமை மீறல்களால் கத்தார் உலக கோப்பை போட்டிக்கு எதிர்ப்பு


சன.02,2016. கத்தாரில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளில் குடியேற்றதாரத் தொழிலாளர்கள் மனிதமற்ற நிலையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டில் 2022ம் ஆண்டில் உலக கால்பந்து போட்டி நடத்தப்படக் கூடாது என்று இரசிகர்கள் குரல் எழுப்புமாறு கேட்டுள்ளார் ஜெர்மன் கர்தினால் Rainer Woelki.

2022ம் ஆண்டின் உலக கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறும் என்று, 2010ம் ஆண்டில் FIFA அமைப்பு அறிவித்த பின்னர், கத்தாரில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கென ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்க்கு, போலியான வாக்குறுதிகள் கொடுத்து கத்தாருக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும், கட்டுமானப் பணிகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், 2012ம் ஆண்டில் மட்டும், ஆறாயிரத்திற்கு மேற்பட்ட புகார்களை கத்தார் தொழில் அமைச்சகம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

கத்தாரில், 2012ம் ஆண்டுக்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய 500 இந்தியர்கள் கட்டடங்கள் கட்டும் இடங்களில் இறந்துள்ளனர் மற்றும் மொத்த உயிரிழப்புகள் குறைந்தது 1,200 இருக்கலாம் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

கால்பந்து போட்டி இரசிகரான Cologne பேராயர் Woelki அவர்கள், கத்தாரில், 2022ம் ஆண்டில் உலக கால்பந்து போட்டி நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு விண்ணப்பித்துள்ளார் என்று, Süddeutsche Zeitung தினத்தாள் கூறியது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.